உயிர் கொடுப்பேன்,உண்ணாவிரதம் இருப்பேன் திகில் திரை விமர்சனங்கள்

Posted on Monday, January 19, 2009 by நல்லதந்தி

சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்கள் நம் எல்லோருடைய நெஞ்சைக் கண்ணீரால் நனைய வைத்தன.இப்படியும் நடக்குமா என்று திகிலால் உறைய வைத்தன .

கலைஞர் கதை,வசனம்,திரைக்கதை எழுதி இயக்கி,நடித்த “சாகும் வரை உயிரைக் கொடுப்பேன்” திருமாவளவன் நடித்து,தயாரித்து இயக்கிய “உண்ணாமல் உண்ணாவிரதம்” ,இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,மக்களின் இரண்டு நாள் கவலையை திசைதிருப்பின என்றால் அதில் குற்றம் இல்லை.ஒரு கவலைக்கு பதில் இரண்டு கவலையாக மக்கள் படும்படிச் செய்து அதில் இருவரும் வெற்றி கண்டனர்.இரண்டிலும் வெளிக்கதையில் இலங்கைப் பிரச்சனையையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் உள்ளே வழக்கம் போல சொந்தக் கதைகளே பிரதானமாக இருந்தது.அதை இருவரும் வெளிக்காட்டாமல் தங்களை இலங்கைத்தியாகிகளாக சித்தரித்துக் காட்டியது இருவரின் டைரக்‌ஷன் திறமைக்கு நல்ல உதாரணம்.

கலைஞரின் “சாகும் வரை உயிர் கொடுப்பேன்” வழக்கமான கதைதான் என்றாலும் கலைஞர் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் கம்பனி தயாரிப்பாதலால் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல் படத்தின் திரைக்கதை காமெடியாக அமைக்கப் பட்டிருந்தது,ஜனங்களை எடை போடும் கலைஞரின் திறமையைக் காட்டியது.

மேடை ஏறும் போதெல்லாம் உயிரைக் கொடுப்பேன் என்கிற வசனத்தைக் கலைஞர் பேசுகிறார்.ஜனங்கள் சிறிது தொய்வடையும் போது,வசனகர்த்தா கலைஞர் வசனத்தை மாற்றிப்போட்டு கடலில் கட்டு மரமாவேன் என்று சொல்லும் போதிலும்,சில இடங்களில் விலா எலும்பை முறித்தாலும் ”ஒகேனக்கல்” ஆவேன் என்று பஞ்ச் டையலாக் அடிக்கும் போதும் நடிகர் கலைஞர் ஜொலிப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.சும்மாவா எத்தனை வருட நடிப்பு அனுபவம்.

வசனமா நடிப்பா எதைப் பாராட்டுவது என்று திகைக்க வைத்து விடுகிறார் மனிதர். அதிலும் ”இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் கொடுப்பேன்” என்கின்ற வசனத்தை வழக்கம் போல் சொல்லாமல் ”கொடுப்பேன் உயிர் தமிழர்களுக்காக இலங்கை” என்று ஜூனூன் தமிழில் வசனம் பேசிவிட்டு எல்லாம் அன்னை சோனியாவின் ஆசியால் வருவது என நமுட்டு சிரிப்பு சிரிப்பது திரை அரங்கை அதிர வைக்கிறது.

ப்ரணாப் முகர்ஜியுடன் “போவீயா! போமாட்டாயா! போலேன்னா உன் பேச்சுக்கா!” என்ற பாடலில் கலைஞரும்,ப்ரணாப் முகர்ஜியும் டப்பாங்குத்து டான்ஸ் ஆடிஅசத்துகின்றனர்.நடன இயக்கத்தை மன்மோகன் சிங் கையாண்டு இருக்கிறார்.சில இடங்களில் நம்புகிறார்ப்போல அமைத்திருக்கிறார்.சில இடங்களில் சற்று சோடையாகும் போது கலைஞர் தன் அனுபவத்தால் அதைச் சமாளிக்கிறார்.

”இலங்கைத் தமிழன் சாகிறான்.அவனைக் காப்பாற்ற வழியில்லை வா!தமிழனே அனைவரும் சேர்த்து சாவோம்” என்று சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே கவலைப் படும் காட்சி ஏற்கனவே கலைஞர் புரெடெக்‌ஷாரின் ”இலங்கைத் தமிழருக்கு இன்னுயிரைத் தருவோம் Part 3 யில் கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்காக பிறந்தநாளைக் கொண்டாட மாட்டேன் என பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தின் போது சொன்னதை நினைவு படுத்துகிறது.டைரக்டர் கவனிக்கவில்லையா?.அதே போல் அந்தக் காட்சியில் அவர் அனைவரும் சாவோம் என்று கூறிக் கொண்டு அழுதவாறு வானத்தைப் பார்க்கும் போது ஆயுதமேற்றிக் கொண்டு இலங்கை செல்லும் இந்திய விமானம் கண்ணில் படுகிறது.இது டைரக்டரின் உத்தியா?அல்லது தெரியாமல் நடந்த தவறா? என்று தெரியவில்லை.கலைஞருக்குத்தான் வெளிச்சம்.

க்ளைமாக்ஸ் காட்சி திருமங்கலம் இடைத்தேர்தலில் அமைக்கப்பட்டு இருப்பது ஏனென்று புரியவில்லை.இப்போது கலைஞர் இயக்கத்தில் தயாராகிவரும் “பாரப்பா! பார்லிமெண்டப்பா!” என்கிற படத்தின் முதல் காட்சியாக இருக்குமோ என்னவோ?.ஆனாலும் கலைஞரின் இயக்கத்தில் ஒரு காட்சிகூட வீணாகாது என்று நிரூபிக்கும் வகையில் கடைசி காட்சி சூப்பர்!.

அழகிரிக்கு “ நீ தென்மண்டல திமுக செயல் அமைப்பாளராக இரு!” என்று கலைஞர் சாபம் விடும் காட்சி அற்புதம்.அதைக் கேட்டு எத்தனை பாரத்தை நான் தாங்குவேன் என்று அழுது பிறகு அதை வீரமுடன் ஏற்கும் காட்சியில் அழகிரி சோபிக்கிறார்.
இந்த மாதிரிக் காட்சிகள் கலைஞரின் இயக்கத்தில் வழக்கமாக பார்க்கும் ஒன்று என்றாலும் ஒவ்வொரு முறையும் நம்புமளவிற்கு இருப்பது கலைஞரின் திரைக்கதை அமைக்கும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!.

திருமாவளவனின் ”லோ” பட்ஜெட் படமான “உண்ணாமல் உண்ணாவிரதம்” இரண்டு நாள் கூட ஓடாதது,முதலில் திருமாவளவனுக்குத்தான் மகிழ்சி அளித்திருக்கும்.

கதை என்னவோ வழக்கமான பங்காளிச் சண்டைக்கதைதான் அதை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏற்றிக் காட்டும் விதத்தில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.இதற்கு முன்னரே தமிழக நடிக இயக்குனர்களின் பாரம்பரியப் படி இலங்கைப் பிரச்சனைக் கதையில் இவரும் பலமுறை நடித்திருக்கிறார் என்றாலும் இந்த தடவை இவரது நடிப்பு எடுபடவில்லை.

தம்பி செல்வப் பெருந்தகை வீட்டிலுள்ள நகை நட்டுக்களை அபேஸ் செய்து விட்டு மாயாவதி பஸ்ஸில் ஏறிக்கொண்டு திருமாவளவனுக்கு டாட்டா காட்டி சிரிக்கும் காட்சியில் இருவருமே தங்களுடைய அதி அற்புத நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர்.திருமாவளவன் அழ,செல்வப் பெருந்தகைச் சிரிக்க,கேமரா சுழன்று இருவரையும் சுத்தி வருவது டைரக்டரின் திறமை வெளிப்படுத்துகிறது.

செல்வப் பெருந்தகை மாயாவதி பஸ் கம்பனியில் கிளீனர் வேலையில் சேருமாறு திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுக்கும் காட்சி செமை நக்கல்.பதிலுக்கு திருமாவளவன் பஸ்ஸைப் பஞ்சர் ஆக்குவேன் என்று ஆவேசமாக முள்ளை எடுத்துக் காண்பிக்கும் போது தியேட்டரே திகிலால் உறைகிறது.

ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கலைஞரிடம்,செல்வப் பெருந்தகை ஸ்கூலுக்கு வரமாட்டான் அவனுக்கு டி.ஸி கொடுத்து விடுங்கள் என திருமாவள்வன் கேட்கும் போது “வெயிட் அண்ட் ஸீ” என கலைஞர் புன்னகைக்கும் மர்மம் நமக்குப் புரிவதால் அவருடைய சிரிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

தயாரிப்பாளர் திருமாவளவனுக்கு தன்னுடைய தயாரிப்பு கடலூர் ஏரியாவைத் தவிர வேறங்கும் ஓடாமல் இருப்பது பெருங்கவலையாக இருக்கும் போலிருக்கிறது.அதனால் தெற்குப் பக்கமும் ஓடுவதற்காக சில சண்டைக் காட்சிகளை மதுரையில் எடுத்து இருக்கிறார்.ப்ஸ் எரிக்கிறவரைக்கும் பல்லுக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்த்து விட்டு “ஆச்சா! சரி ஓடுங்கப்பா” என்று எரித்தவர்களைக் கேட்டுக் கொண்டு “பஸ் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுப் பிடிப்பேன்” என்று வானத்தை நோக்கி சுடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.போலீஸ் கலைஞர்களைக் காமெடியனாக மட்டும் காட்டுவது கலைஞரின் பாணி என்றாலும்,கலைஞரிடம் சிஷ்யனாக இருந்தவர் என்று நிருபிக்கிறார் இயக்குனர் திருமாவளவன்.

க்ளைமாக்ஸ்தான் சப்பென்று போய்விட்டது.இலங்கை பிரச்சனை கட்டுரையை பேச்சுப் போட்டிக்காக படித்துக் கொண்டு வந்த திருமாவளவனை பேசக் கூடாது நீ பேசினால் அந்தச் சத்தத்தில் கூரை இடிந்து விடும், எனக்கு ஆபத்து என்கிறார் கலைஞர்.பேச முடியாததால் தொண்டைக் கட்டிப் போன திருமாவளவன் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.தம்பி ஓடிப்போக,ஸ்கூல் எல்லாம் கிண்டல் செய்யகிறது வேறு வழியில்லாமல் உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார்.மாணவர்கள் கிண்டலை நிறுத்தியவுடன் உண்ணாவிரதம் க்ளோஸ்.பத்து நாளைக்காவது ஓடும் என்று கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு படம் பார்க்க வந்தவர்கள் கதி பரிதாபம்.மம்தா பானர்ஜி நடித்த உண்ணாவிரதப் படம் போல 30 நாளைக்கு மேல் ஓடும் என எதிர்பார்த்தால் நீங்கள் இந்த ஊரில் இருப்பதற்கு இலயக்கில்லை என்று அர்த்தம்.

திரை முன்னோட்டம்

இராமதாஸ் அளிக்கும் “பத்துக்கு பத்து” குடும்பச்சித்திரத்தின் ஒரு காட்சி மறைமலை நகரில் படமாக்கப்பட்டது.கலைஞர்,இராமதாஸ் நடிக்கும் இப்படத்தில் காமெடிக்குப் பஞ்சமில்லை.மத்திய அரசின் ”பத்துக்குப் பத்து” வீட்டை சோனியா பெரியம்மா,மன்மோகன் சிங் மாமாவுடன் சேர்ந்து பங்காளிகளான கலைஞரும்,இராமதாஸும் கட்டுகிறார்கள்.இந்த வீட்டினால் அந்தத் தெருவே நாறுகிறது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கொண்டு போயிருக்கிறாராம் டைரக்டர்.

தெருவில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வசிப்பவர்களை, இலங்கையில் குப்பை போட்டதற்கு திட்டும் போது தங்களுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லாததைப் போல கலைஞரும்,இராமதாஸும் நிற்க்கும் காட்சி சூப்பர்.சில சமயங்களில் நல்லாயிருப்பார்களா இந்த வீட்டுக்காரர்கள்,நாசமாகப் போகட்டும்,கட்டையில போகட்டும் இந்த வீட்டில் உள்ள தங்களையே தாங்களே திட்டிக் கொள்ளும் ஸ்பிலிட்டிங் மல்டி பர்சனாலிட்டிக் காட்சிகளில் முதலிடம் தருவது கலைஞருக்கா இராமதாஸுக்கா என்று தமக்கு நிலைதடுமாறுகிறது,என்கிறார் நமது திரை நிருபர்.ஹாட்ஸ் ஹாஃப்.

தீபாவளிக்கு இரயில் பட்டாசு விடும் போதும்,மணலில் மல்டி ஸ்பெஸாலிட்டி ஆஸ்பத்திரி கட்டும் சீன்களிலும் வேடிக்கைப் பார்க்க தெருவே கூடும் போது, தான் வீட்டைச் சேர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள இராமதாஸ் முண்டியடித்துக் கொண்டு தலையைக் காட்டும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றனவாம்.தமிழன் என்றால் இந்த மத்திய அரசு வீட்டுக்காரர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது என்ற வசனத்தை இராமதாஸ்,கண்ணாடியின் முன் நின்று தனக்குத்தானே ஆவேசமாகப் பேசும் காட்சி நேற்று படமாக்கும் போது படப்பிடிப்புக் குழுவினரே துக்கம் தாங்காமல் அழுதார்களாம்.

மொத்தத்தில் வீட்டில் இருக்கும் இராமதாஸ் வெளியேறும் காட்சி இன்னும் படமாக்க வில்லை என்பதால் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மூன்று மாதம் ஆகலாம்.