சொன்னதைச் செய்யும் கழக அரசு ||| மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி!

Posted on Saturday, July 19, 2008 by நல்லதந்தி

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாகவே மின்வெட்டு தமிழகமெங்கும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.சென்னையைத்தவிர!.
மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியைத் தவிர தமிழக மக்கள் அனைவருக்கும் மின் வெட்டு இருப்பது அவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் தெரிந்தது.ஆற்காடு வீராசாமி மட்டும் மயக்கத்திலேயே இருந்ததால் மின்வெட்டு இருப்பது அவருக்கு மட்டும் தெரியாமல் போனது!.
ஒரு கட்டத்தில் நெருக்க்கடி அதிகரிக்கவே மின்வெட்டு இல்லை ஆங்காங்கே மின் தடை மட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று உளற ஆரம்பித்தார்.போராட்டம் எல்லை மீறவே மின்வெட்டிற்க்கு சப்பைகட்டு கட்ட ஆரம்பித்தார்.


அப்போது உளறியதை கீழே பார்க்கவும்! .

இன்று உளறியதை அதற்கும் கீழே பார்கவும்!.

சொன்னதை செய்யும் அரசு வாழ்க!

மே மாதம் சொன்னது!


வரும் 15ம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கான மின்சார விடுமுறை ரத்தாகிறது. அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடே இருக்காது,'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். திருச்சியில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.
தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

(மிச்சம் இருக்கும் மின்சாரத்தை விற்பார்களாம்! இது எப்படி இருக்கு! :) )


தற்போது சொல்வது!


"சென்னை மாநகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தென்மேற்கு பருவமழை பெய்து, நீர் நிலைகளில் போதுமான அளவு இருப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும்' என்று மின்துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நிதித்துறைச் செயலர், தொழில் துறைச் செயலர், எரிசக்தித்துறைச் செயலர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. நாம் எதிர் பார்த்த அளவுக்கு காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை.காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.
மழை பெய்யாததால் நீர் மின் சாரம் அதிகமாக கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரத்தில் 60 சதவீதம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.அண்டை மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. கேரளா நம்மிடம் நான்கு டி.எம்.சி., தண்ணீர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வாரம் ஒரு நாள் விடுமுறை திட் டம் பற்றி விவாதிக்கப் பட்டது
.
இதன்படி, தமிழகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்து, வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே 15 வரை இந்த திட்டத்தை அமல்படுத்திய போது அளிக்கப் பட்ட வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கேட்டனர். அந்த வரி விலக்கு மேலும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இது தவிர, பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்கப் படும்.மேலும், டீசலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை வைத்தனர்.
இது பற்றி விவாதித்து இறுதியில், இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பை, 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை தொழிற்சாலைகளும் ஈடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும். தமிழகத்தில் அறிவிக் கப்படாத மின் வெட்டு இருக் காது. (மீண்டும் பயமுறுத்துகிறார்!)
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறிப் பிட்ட நேரம் மட்டும் மின் தடை செய்வதன் மூலம் 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். சென்னையை எட்டு பகுதிகளாகப் பிரித்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை இருக்கும்.
கிராமப்புறங்களில் ஏற்படும் அதிக மின் தடையை சரி செய்யத் தான் இந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதிகபட்சம் வாரத் துக்கு நான்கு நாட்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரமும், இரண்டு நாட்கள் மட்டும் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப் படும்.தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்து, நீர்த்தேக்கங்களில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு வரும் வரை இந்த நிலைமை இருக்கும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக மின் தடை கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அதற்கான மின் வெட்டு இருக்காது. மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால் உற் பத்திப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஐந்தாயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தீட்டி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடைந்து நான்காயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்று அமைச்சர் கூறினார்.

21 Responses to "சொன்னதைச் செய்யும் கழக அரசு ||| மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி!":

Anonymous says:

//கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.
தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். //

மே மாதம் சொன்னது ஒன்றுகூட நடக்கவில்லையே?

குசும்பன் says:

அவர் மனைவி காசிக்கு போய் விட்டு வந்து சொன்னாங்களாம் தமிழகம் சொர்கம், காசியில் 9 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது என்று.

என்ன கொடுமைங்க இதுக்கு எதுக்கு காசிக்கு போகனும் ஏசி ரூமை விட்டு கொஞ்சம் தமிழக கிராமம் பக்கம் போகலாமே.

நல்லதந்தி says:

//அவர் மனைவி காசிக்கு போய் விட்டு வந்து சொன்னாங்களாம் தமிழகம் சொர்கம், காசியில் 9 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது என்று.

என்ன கொடுமைங்க இதுக்கு எதுக்கு காசிக்கு போகனும் ஏசி ரூமை விட்டு கொஞ்சம் தமிழக கிராமம் பக்கம் போகலாமே.//

அப்படி போடு அருவாளே!.
நன்றிங்க குசும்பன்.

புதுகைச் சாரல் says:

திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதன் முழுக்கருத்தென்ன தெரியுமா?

வீரசுந்தர் says:

ஆள்வோர்களுக்கு ஆயிரம் சொந்தப் பிரச்சனைகள். மக்களைப் பற்றி யோசிக்க இவர்களுக்கெங்கே நேரமிருக்கிறது!?

:-(

தஞ்சாவூரான் says:

//காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.//

இது குறித்து, வாயு பகவானுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதில் வந்ததும், ஆவன செய்யப்படும். கரன்ட் கட்டுன்னா, குப்பன், சுப்பன், அமைச்சர், அதிகாரி எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்கணும்.

ச்சின்னப் பையன் says:

கெட்ட கெட்ட வார்த்தையா வாயிலே வருது.. ஆனா, அதெல்லம் இங்கே போடக்கூடாதுன்னு சொன்னதாலே போடலே!!!

நல்லதந்தி says:

//திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதன் முழுக்கருத்தென்ன தெரியுமா?//

கதை வசனம் எழுதுபவர்களுக்குஅது கூடவா தெரியாது!.நன்றி நண்பர் புதுகைச் சாரல்!

நல்லதந்தி says:

நன்றி நண்பர் வீரசுந்தர்!.
மக்களைப் பற்றி அரசியல்வாதி நினைக்கிறார்களா?

நல்லதந்தி says:

//இது குறித்து, வாயு பகவானுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதில் வந்ததும், ஆவன செய்யப்படும். //

நன்றி நண்பர் தஞ்சாவூரான்!

வாயு பகவானுக்கு மட்டுமா? வருணபகவானுக்கும் கடிதம் அனுப்பியிருந்தால் புனல் மின்சாரமும் எடுக்கலாமே??

நல்லதந்தி says:

//கெட்ட கெட்ட வார்த்தையா வாயிலே வருது.. ஆனா, அதெல்லம் இங்கே போடக்கூடாதுன்னு சொன்னதாலே போடலே!!!//

ச்சின்னப்பையன் என்னை மட்டும் தான் திட்டக்கூடாது.

Anonymous says:

இரண்டு ஏக்கர் இலவசமாக வழங்கும் திட்டம் உள்ளங்கை அளவிற்கு ஆனதைவிட மோசமாக போய்விட்டதே.மே மாதம் பேசியதற்கும் இப்போது அவர் அறிவித்ததற்கும் உள்ள வித்தியாசம்.

jackiesekar says:

ஆற்காடு வீராசாமி சொல்லும் சப்பபைகட்டை ஏற்க்க தயாரில்லை, இருப்பினும் மற்ற மாநிலங்கள் இதை விட மோசம்... முதலல் விவசாயிகளுக்கு கொடுக்கும் இலவசமின்சாரம் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மட்டும் என்பதை நடைமுறை படுத்த வேண்டும், 5 வருடம் புரட்சி தலைவி எந்த எதிர்கால திட்டமும் செயல்படுத்தாது குறித்து எந்த கேள்வியும் ழுப்ப மாட்டார்கள் என்பது தெரிந்த சேதி தான். அதே போல் ஜே ஆட்சி காலத்தில் இப்போது இருப்பத போல் ஐடி துறை அந்த அளவுக்கு வளர்ச்சி அடையவி்ல்லை என்பதையும் நாம் அலசிபார்க்க வேண்டும்

நல்லதந்தி says:

//5 வருடம் புரட்சி தலைவி எந்த எதிர்கால திட்டமும் செயல்படுத்தாது குறித்து எந்த கேள்வியும் ழுப்ப மாட்டார்கள் என்பது தெரிந்த சேதி தான்.//
நீலகிரி மாவட்டத்தில் பைகரா புதிய நீர் மின் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அமைக்க முயன்றபோது டி.ஆர்.பாலு சுற்றுசூழலுக்கு குந்தகம் விளைவிக்கிறது என்று கதைவிட்டு மின் திட்டத்தைத் தடுத்தது தங்களுக்கு நினைவில்லையா? நண்பரே! :)

Anonymous says:

களை கட்டுது!

Anonymous says:

:)

Anonymous says:

அடப்போங்கையா நீங்களும் உங்க அரசியலும்.

Anonymous says:

பவர் கட்டாயிடுச்சி அப்புறம் பேசலாம்.

Surya says:

என்ன சார் ,, ஒண்ணும் சத்தத்தை காணோம். இந்த பதிவு போட்டதால, கரைவேட்டிகாரங்க ஆட்டோ வச்சி தூக்கிட்டு போய்ட்டாங்களா? இல்ல சினிமா நிருபர் blog la போய் தூங்கிகிட்டு இருக்கீங்களா? 19 ம தேதியோட நிக்குது. ?

Surya says:

மன்னிக்கணும் நல்ல தந்தி ! எதோ நினைப்புல 'கச்சத்தீவும்,கலைஞரின் நீலிக் கண்ணீர் கபடநாடகமும்!' பதிவுக்கு போட வேண்டிய கமெண்ட் ஐ இங்கே போட்டுட்டேன்.

நல்லதந்தி says:

//என்ன சார் ,, ஒண்ணும் சத்தத்தை காணோம். இந்த பதிவு போட்டதால, கரைவேட்டிகாரங்க ஆட்டோ வச்சி தூக்கிட்டு போய்ட்டாங்களா? இல்ல சினிமா நிருபர் blog la போய் தூங்கிகிட்டு இருக்கீங்களா? 19 ம தேதியோட நிக்குது. ?//

சூர்யா! இடுகைகள் ஒரே அரசியலாய் போய்விட்டதால் போரடித்துப் போய் கொஞ்சம் "கேப்" விட்டுருக்கேன்.ஆமாம் ஜோர்ல இருக்க்கீங்களா? 22ம் தேதி கூட போட்டேனே?.பாக்கலையா?

//சினிமா நிருபர் blog la போய் தூங்கிகிட்டு இருக்கீங்களா? //
அங்கப்போய் அப்பப்ப தூங்கினாலும்,கரெக்டா வீட்டிக்கு வந்துருவோம் இல்ல!. :)