எனக்கு தெரிந்து போலி மதசார்பின்மை இல்லாத ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா தான்.
இந்து மதத்தை பற்றி திட்டிப் பேசுவதும்,மற்ற மதங்களைப் புகழ்ந்து பேசுவது மட்டுமே எழுதப் படாத மதசார்பின்மையாகிவிட்டது.
இந்து மதத்தைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டால் உடனே அவர்கள் RSS,இந்துத்வா வாதிகள்,அல்லது இந்து தீவிரவாதிகள் என்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் உடனே சித்தரித்து விடுகின்றன.
மதசார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் ஒரே நிறை என்றுதானே அர்த்தம்.அதை விட்டுவிட்டு பெரும்பான்மை மக்களின் மதத்தை இழிவு படுத்துவதும்,சிறு பான்மை மக்கள் மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் கண்டிக்காமல் இருப்பதும் தான் மதசார்பின்மையா?.
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால், அது கலை!.அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்கள் இந்து வெறியர்கள்.
அதே ஒரு ஓவியக் கண்காட்சியில் முஸ்லீம் மன்னர்களின் கொடுங்கோல் தன்மையைப் பற்றி படம் இருந்தால் அதற்கு அரசாங்கமே எதிர்ப்பு தெரிவிக்கின்றது.அது சிறு பான்மையினர் மனதைப் புண்படுத்துமாம்.என்ன கொடுமை!.
அரசனுடைய கொடுங்கோன்மைக்கும் சிறு பான்மையினருக்கும் என்ன சம்பந்தம்.இது முஸ்லீம்கள் அனைவரையுமே அரசு கேவலப் படுத்தும் செயல் அல்லவா?.சிறுபான்மையினர் அனைவருமே அந்த அரசனைப் போன்றவர்கள் தான் என அரசு நம்புகிறதா?.
முஸ்லீம்கள் இதைக் கண்டிக்காமல், அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதால், அவர்கள் தங்களுக்கு ஆதரவானவர்கள் என்று தவறாக கருதிக்கொள்கிறார்கள்.எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை சிறுபான்மையி னர் மறந்துவிடக்கூடாது.
இந்த நிலையில் தானும் ஒரு அரசியல்வாதியாய் சில தவறு களைச் செய்திருத்தாலும், எல்லா மதங்களும் சமம் என்று உண்மையாய், மனதில் இருப்பதை தைரியமாகச் சொல்லும் ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு புரட்சிதலைவிதான்!
அவருடைய அறிக்கை கீழே!
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்ட வசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும்.
அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரிசாவில் மத பிரச்சினையின்போது பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது. அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
5 ஆயிரம் ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.
காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.
1990-களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச்சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள். அங்கிருந்து தப்பிய சுமார் 31/2 லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படை வாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒருகண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம். காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்.
இவ்வாறு அறிக்கையில், ஜெயலலிதா கூறியுள்ளார்.