ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1
3 comments Filed Under: அனுபவம், புதுமைப்பித்தன், வரலாறு
குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 3
முதற்பகுதி: பகுதி-ஒன்று
இரண்டாம்பகுதி: பகுதி-இரண்டு
கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்- அத்தியாயம் - இரண்டு.
இவ்விதமாக சத்தியமங்கலத்திற்கு முதல் முதல் வந்தவர்களிலே எனக்கு ஏழாம் தலைமுறை பாட்டனான கோவிந்தப் பட்டர் ஒருவர்.அக்காலத்தில் அவருக்கு வயது 20.அவர் காசிப்பட்டர் குமாரர்.அவர் சத்தியமங்கலத்தில் குப்பா வாத்தியார் கன்னிகையை விவாகம் செய்து கொண்டவர்.அவர் வெங்கிடாசலபதியின் அனுக்கிரகத்தால்,புத்திர சந்தானம் பெற்று ஜேஷ்ட குமாரனுக்கு வெங்கிடபதி என்று நாமகரணம் செய்தார்.இந்த வெங்கிடபதி அய்யர் மகாபுத்திமான் ஆனபடியால்,சத்தியமங்கலம் அரண்மணைச் சர்வாதிகாரியின் கச்சேரியில் ஒரு உத்தியோகத்தில் அமர்ந்தார்.
இவர் காலஞ் செல்லவே இவருடைய உத்தியோகத்தில் இவருடைய நான்காம் குமாரரான நாராயண அய்யர் நியமனம் பெற்றார்.இதற்கு சமீப காலத்தில் திருமலை நாயக்கன் மதுரை அரசனானான்.அவன் தன்னுடைய மருமகனான அளகாத்திரி நாயக்கனை சத்தியமங்கலத்திற்கு ராஜாவாக நியமித்து,நாராயணையர் யுத்த காலத்தில் சர்வாதிகார உத்தியோகத்தை நிர்வகிக்கத் தகுந்தவர் என்று நேரில் தெரிந்து அவரைச் சர்வாதிகாரியாக நியமித்தான்.
நாராயணையருக்குப் பிறகு அவருடைய ஜேஷ்ட குமாரராகிய வெங்கடபதி அய்யர் சத்தியமங்கலம் சர்வாதியாக நியமனம் பெற்றார்.மதுரைத் துரைத்தனத்தின் பலம் நாளுக்கு நாள் க்ஷீணித்துக் கொண்டு வந்து மைசூர் துரைத்தனத்தார் பலம் நாளுக்கு நாள் விருத்தியடைந்து கொண்டு வந்தது.
கடைசியாக,மைசூர் அரசனான சிக்க தேவராஜ உடையார் மலைக்கணவாய் களின் அடிவாரங்களில் உள்ள சத்தியமங்கலம் முதலான கோட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கவர்ந்து கொண்டு சத்தியமங்கலத்தில் இருந்து அந்த நாட்டை ஆளுவதற்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தி சர்வாதிகார உத்தியோகத்தில் அனுபவமுள்ள வெங்கடபதி அய்யரையே சர்வாதியாக நியமித்தான்.
அரசாட்சி மாறியதனால்,ராஜ்ஜியத்தின் வரும்படி குறைந்து போனது.நாட்டில் கூட்டக் கள்வரின் உபத்திரவம் மேலிட்டது.வெங்கடபதி அய்யர் வரிகள் கிரமமாக வசூலாவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து,சத்தியமங்கலம் நாட்டின் வரும்படி முன்னிலும் அதிகமாகும்படி செய்தார்.கூட்டக் கள்வர்களை எல்லாம் பிடித்துத் தண்டணைக்குட்படுத்தி ஜனங்கள் சமாதனமாய் வாழ்வதற்கு வேண்டிய வழி துறைகளையெல்லாம் ஏற்படுத்தியதினாலே அவர் சத்தியமங்கலம் ராஜாவிற்கு முக்கிய சிநேகிதர் ஆனார்.
அதற்கு பிறகு,அவருடைய இளைய சகோதரன் ராமசுவாமய்யர் சர்வாதிகாரியாக நியமனம் பெற்றார்.அவர் காலத்திற்குப் பிறகு கோவிந்த பட்டருடைய கடைசிக் குமாரன் விசுவபதி அய்யருக்குக் கனிஷ்ட புத்திர சந்ததியிலே பேரனான விஸ்வபதி அய்யர் சர்வாதிகாரியானார்.இவருக்குப் பிறகு சர்வாதிகார உத்தியோகம் கோவிந்த பட்டருடைய குடும்பத்தை விட்டு விலகியது.இதற்கு சமீப காலத்தில் மைசூர் ராஜ்ஜியம் ஹைதர் நாவாபுடைய ஆட்சிக்குள்ளானது.
மேல கண்டவர் சர்வாதிகாரம் செய்யும் காலத்தில் கோட்டை வீரன்பாளையம் அக்கிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரசாமி தேவாலயத்திற்கு மேற்கு; நடு வீதிக்கும் வடக்கு; வடக்கு வீதிக்கு மத்தியில் கட்டப் பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில்,அவர்கள் ஏக குடும்பமாக வாசம் செய்து வந்தார்கள்......
தொடர்ச்சி பிறகு....
2 comments Filed Under: தமிழ், வரலாறு
குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 2
முதற்பகுதி பகுதி - ஒன்று
கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்- அத்தியாயம் - ஒன்று.
பூர்வகாலத்தில் நம்ம முன்னோர்கள் திருவண்ணாமலையில் இருந்தவர்கள்..... திருவண்ணாமலை ராஜ வம்சத்தர்களுடையவும்,பிறகு செஞ்சி நாயக அரசர்களுடையவும் சம்ரக்க்ஷணையில் பரம்பரையாக இருந்தவர்கள். அவர்கள் திருவண்ணாமலையை விட்டு இன்ன காலத்தில் சத்தியமங்கலத்திக்கு வந்தார்கள் என்றும்,இன்ன காரணம் பற்றி வர வேண்டியதாயிற்று என்றும் சரித்திர சம்பந்தமாகவுள்ள சில முக்கிய சங்கதிகளை நான் சுருக்கிச் சொல்வதவசியம்.
மகம்மத் டோக்ளாக்கு டில்லி சர்வாதிகாரியாக இருந்த காலத்தில் மத்திய இந்தியாவில் "டெக்கான்" முழுவதும் அவனுடைய ஜெனரல்களுடைய ஆட்சிக்குள்ளாகியது.......
1335-ம் வருஷத்தில் ஸ்தாபிக்கப்படலான விஜயநகர ராஜ்யம் நாளுக்குநாள் விருத்தியடைந்து,அளவற்ற செல்வமும்,கீர்த்தியும் பெற்றது.டில்லி சக்கரவர்த்திகள் முதலாய் அஞ்சும்படி 230 வருஷ காலம் வம்ச பரம்பரையாக துரைத்தனம் செய்து வந்தார்கள்.
இப்படியிருக்கையில், (டெக்கான்) மத்திய இந்தியாவில் பீஜப்பூர், கோல்கொண்டா,அஹெமெத் நகர் மகம்மதிய ராஜாக்கள் ஒன்று கூடி 1565-ம் வருஷத்தில் "தாலிகோட்" என்னுமிடத்தில் விஜயநகர மகாராஜாவுடன் பெரும் போர் புரிந்து மகாராஜாவைக் கொலை செய்து விஜயநகரத்தைப் பாழாக்கி விட்டார்கள்.
அந்த மகாராஜாவினுடய சகோதரர் ஒருவன் மகம்மதிய ராஜாக்களுடைய சம்மதியின் பேரில் சந்திரகிரியில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டான். மதுரை,தஞ்சாவூர்,செஞ்சிக்கோட்டை ஆகிய இவைகளில் இருந்து துரைத்தனம் செய்து வந்த நாயக்க அரசர்கள் இவனுக்கு கீழ்ப்பட்ட ராஜாக்களானார்கள்.
விஜயநகரம் தோல்வி அடையவே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ராஜாவுடைய பலம் குறைந்து போயிற்று.அவனுடைய ஆட்சிகுட்பட்டு ஒரு சிறு பாளையபட்டுக்கு தலைவராக இருந்து நாளாவட்டத்தில் பலமடைந்த ஒருவன்,தன் எஜமானிடமிருந்து மைசூர் சீமையை அபகரித்துக் கொண்டு தானே ஸ்ரீரங்கப் பட்டணத்திலிருந்து துரைத்தனம் செய்து வரலாகிறான்.இப்போது மைசூர் தேசத்தையாளும் மகராஜா இவருடைய சந்ததியியைச் சேர்ந்தவர்.
ஸ்ரீரங்கப் பட்டணத்தின் ஆட்சிகுட்பட்ட கோயமுத்தூர்,சேலம் அடங்கிய கொங்கு நாட்டை அதே காலத்தில் மதுரை அரசரான வீரய்ய நாயக்கன் கட்டிக் கொண்டான். இது முதல் மைசூர் அரசனுக்கும் மதுரை அரசனுக்கும் ஓயாமல் போர் நேர்ந்தது.மைசூர் படைகள் மலைக் கணவாய்களின் வழியாக கொங்கு நாட்டுக்குள் நுழையாதபடி கணவாய்களின் அடிவாரங்களில் டணாய்க்கன் கோட்டை,சத்தியமங்கலம்,அந்தியூர்,காவேரிபுரம் ஆகிய இடங்களில் மதுரை அரசனான வீரய்ய நாய்க்கன் பலமான கோட்டைகளைக் கட்டி அவைகள் ஒவ்வொன்றிலும் காப்பு சேனைகளை நிறுத்தி சத்தியமங்கலம் கோட்டையில் இருந்து அந்த நாட்டை ஆளுவதற்கு ஒரு ராஜாவையும் ஏற்படுத்தினான்.
இப்படியிருக்கையில்" தாலிகோட்" யுத்தத்திற்கு பிறகு மகம்மதியர்---குதிரைப் படைகளை நடத்திக் கொண்டு அடிக்கடி திருவண்ணாமலை சீமைக்குள் கொள்ளையும்,கொடுமைகளையும் செய்து வந்தார்கள்.அவர்களை அடக்க சந்திரகிரி ராஜாவாலும் முடியவில்லை.இதனால் நம் முன்னோர்கள் திருவண்ணாமலையில் வசிக்க கூடாமல்,அதே காலத்தில் மதுரை ராஜ்யம் பலமுள்ளதாகி வடக்கே மலைவரிசைகள் வரை பரவி வீரப்ப நாய்கனுடைய துரைத்தனத்தில் ஜனங்கள் சமாதானத்துடன் வாழ்வது கேட்டு அவர்கள் மதுரைக்குச் சென்று வீரப்ப நாய்க்கனுடன் முறையிட்டுக் கொண்டார்கள்.
வீரப்ப நாய்க்கன் அவர்களைச் சத்தியமங்கலத்திற்கே அனுப்பி அங்கே கோட்டை வீரப்பன் பாளையம் என்ற பெயரால் ஒரு அக்ரகாரம் கட்டி அவர்களுக்கு கிரகதானம் செய்து அதற்கடுத்து மேல் புறம் இருக்கும் கொளத்தூர் கிராமத்தை சர்வமானியம் விட்டான்.இந்த சர்வமானியத்தை நம் முன்னோர்கள் வெகு காலம் அனுபவித்து வந்ததில் கடைசியாக அநேக வருஷ காலம் தரிசு கிடந்து குயிட் ரெண்டு(quit rent) செலுத்தப் படாமல் 1860-ம் வருஷம் சர்க்காருக்கு சேர்ந்து போச்சுது.
தொடர்ச்சி பிறகு...
9 comments Filed Under: தமிழ், வரலாறு
அரைத்த மசாலாவையே திரும்பத்திரும்ப அரைக்கும் பாகிஸ்தான் அரசியல்!
பாகிஸ்தானில் மட்டும் அரசியல், பார்த்த சினிமாவையே மீண்டும்மீண்டும் பார்ப்பது போல, பார்த்த காட்சிகளே திரும்பதிரும்ப அரங்கேறுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சியை தற்போது மீண்டும் பாகிஸ்தான்மக்கள் பார்க்கிறார்கள்.
1969-ல் குமுதத்தில் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைப்படியுங்கள். நீங்கள் மாற்ற வேண்டியது 'அயூப்கான்' என்று வரும் இடத்தில்'முஷாரஃப்' என்று படிக்க வேண்டியது மட்டுமே!
பாவம், அயூப்கான்!.அஸ்தமனம் என்பது எல்லோருக்கும் உண்டுதான்.ஆனாலும்,தளபதியாக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த இந்த பாகிஸ்த்தான் தலைவரின் அரசியல் வாழ்க்கை இப்படிப்பொசுக்கென்றா முடிய வேண்டும்?. பரிதாபத்திற்க்குரிய விஷயம். ஊழல்பிடித்த அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து அன்று மக்களை அவர் மீட்டார்.
இன்றோ,அவரது பிடியில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ள மக்கள் ஒரு புரட்சியே செய்து விட்டார்கள். விளைவு? சட்டத்தின் உயிர் ஊசலாட ஆரம்பித்தது.ஒழுங்குக்கு மூச்சுத் திணறலாயிற்று.
எந்த நாட்டிலுமே,வன்முறையை வன்முறையால்தான் ஒடுக்க முடியும் என்ற நெருக்கடியானகட்டம் வரும்போது, ‘கைவரிசையைக் காட்டுங்கள்' என்று இராணுவத்திற்க்கு கட்டளைஇடப்படுவது உண்டு.இராணுவத்திற்க்கு அயூப்கான் கட்டளை இடவில்லை.அதனிடம் சரணாகதி ஆகிவிட்டார்.‘துணைக்கு வாருங்கள்' என்று அவர் தற்போதைய தளபதி யாஹ்யாகானைக் கூப்பிடுவதோடுநிறுத்திக் கொள்ளவில்லை.தூக்கியே கொடுத்துவிட்டார் ஆட்சிப்பொறுப்பை.
இப்போது பாகிஸ்த்தானில் அமைதி நிலவுகிறது என்றால் அதற்க்கு ஒரே காரணம்தான்இருக்க முடியும்.துப்பாக்கி அங்கே அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.பாகிஸ்த்தானிய மக்கள் அயூப்கானுக்கு எதிராகப் பொங்கியது ஏன்?
1 comments Filed Under: அரசியல், வரலாறு
குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 1
வரலாறு, அது எழுதுபவரின் பார்வையையும், கலந்தே எழுதப்படுகிறது..ஒரு மன்னன் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பான் என்பது பிற்காலத்தில் நமக்கு கிடைக்கும் சில ஆதரங்களைக் கொண்டே புனையப்படுகிறது.கிடைக்கும் ஆதாரங்களெல்லாம் அந்த மன்னனாலேயே உருவாக்கப்பட்ட, கல்வெட்டாகவோ,பட்டையங்களாகவோ இருந்தால் அது அவனைப் புகழமட்டுமே செய்யும், அவனுடைய மறுபக்கத்தை காட்டாது.அவனுடைய மறுபக்கத்தை பார்க்கவேண்டுமென்றால்,
அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களைத்தான் கேட்க வேண்டும்.
வரலாற்றை நாம் பாடபுத்தகளில் மட்டுமே படித்திருக்கிறோம்.ஒரு குடும்பத்தின் வரலாறு மூலமாக, விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியிலிருந்து ஆங்கில ஆட்சிகாலம் வரை நடந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் போது அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை நாமே நேரில் அனுபவிக்கிற உணர்வு உண்டாகிறது.
கீழே உள்ள கட்டுரை ஓம் சக்தி இதழின் 1998-ம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியிடப்பட்டது.
இது ஒரு மெனத்கல்ய பிராமணக் குடும்பத்து வரலாறு.விஜய நகர் வீழ்ச்சி தொடங்கி கும்பினி ஆட்சி கொங்கு நாட்டில் கால் கொள்ளும் காலம் வரையிலான நிகழ்வுகள் அடங்கியது.சுவடியின் காலம் 1914.
திப்புசுல்த்தான் பற்றிய கோரச்சித்திரத்தை இந்த ஆவணம் மூலம் பார்க்க முடிகிறது,அதோடு ஆங்கிலேயர் ஆட்சியை வரவேற்று,அவர்களுக்கு இங்குள்ள மக்கள் கோட்டை கொத்தளங்களைத் திறந்து விட்டனர் என்ற வேதனை தரத்தக்க செய்தியையும் இது புலப்படுத்துகிறது.
சேலம் தமிழாசிரியர் புலவர் சீனிராமநாதனிடமிருந்து 1994-ல் சேலம் மாவட்ட வரலாற்று ஆவணக்குழுவிற்குக் கிடைக்கப் பெற்றது,இந்த ஆவணம்.இப்படிப் பட்ட குடும்ப வரலாறு,பொது வரலாற்றை வரைவதற்கு உதவும் என்னும் நோக்கில் "கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்" இங்கு வெளியிடப்படுகிறது.
கோவிந்த பட்டர் குடும்பசரித்திரம் -- பீடிகை.
நான் கோவிந்த பட்டருக்கு ஜேஷ்ட புத்திர வம்சத்தில் ஏழாம் தலைமுறைப் பேரன்மாரில் ஒருவன். என்னை நம் பந்து வர்கத்தினர் சாமண்ணா என்றும்,அன்னியர்கள் சுப்புராயர் என்றும் அழைப்பார்கள்.இப்போது நான் ஏறக்குறைய 70 வயது சென்ற விருத்தனாகி விட்டேன்.
தற்காலம், நம்ம குடும்ப பூர்வ சரித்திரம் தெரிந்தவர்கள் என்னைத் தவிர யாரும் இல்லை.அது என்னோடு மறைவதாக இருப்பதால்,நம்ம குடும்பத்தின் சந்ததியராகிய நீங்களும் உங்கள் வம்சர்களும் மறவாதிருக்கும்,இச்சிறு புத்தகத்தில் எழுதி வைத்ததும் இல்லாமல்,நம்ம வம்ச விருக்ஷத்தையும் இதனோடு சேர்த்திருக்கிறேன்.
இந்த வம்ச விருக்ஷம் கோவிந்த பட்டருடைய ஜேஷ்ட புத்திர வம்சத்தில் வெங்கடபதி அய்யருக்குப் பேரனான சத்திய மங்கலம் வெங்கிட சுப்பையர் வம்ச பரம்பரையாக பெரியோர்கள் சொல்லக் கேட்டும்,நேரில் தெரிந்தும் எழுதி வைத்தது.1863-ம் வருஷத்தில் அவரால் எனக்குக் கொடுக்கலானது.அவர் 80 வருஷ காலம் பிழைத்திருந்து,1880-ம் வருஷத்தில் காலம் சென்றவர்.
வெங்கிட நாராயண அய்யர்-குடும்பபூர்வ சரித்திரத்தை நான்கு அத்தியாயங்களாக வகுத்து எழுதியிருக்கிறேன்.என்னிலும் வயதில் தாழ்ந்தவர்களைப் பற்றி வயதில் முதிர்ந்தோனாகிய நான், இந்தப் பூர்வ சரித்திரத்தில் பிரஸ்தாபிப்பது தகாது.மேலும்,அவர்களைப் பற்றிய சரித்திரம்,இக்கால சரித்திரமாகையால்,நம் குடும்பத்தின் பிற சந்ததியர் 5-வது அத்தியாயமாக எழுதி இதனோடு சேர்க்க வேண்டியது அவசியம்.
1914-ம் வருஷம்,பிப்ரவரி 22-ம் தேதி.
சாமண்ணா ஆர். சுப்பையர்.
தொடர்ச்சி பிறகு.....
25 comments Filed Under: தமிழ், வரலாறு