Showing posts with label பழைய சினிமா. Show all posts
Showing posts with label பழைய சினிமா. Show all posts

தேவரின் திருமுகமும், கொடு முகமும்!

Posted on Sunday, July 12, 2009 by நல்லதந்தி




நண்பர் RV எழுதிய இடுகையைப் பார்த்ததும் வந்த நினைவுகளால் எழுதியது!. முன்பே தேவரைப் பற்றி என்னுடைய இடுகை.

இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!.

ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம்.

முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது.

இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!.

இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!.
நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்‌ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.



ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.
தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு.

பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின.

ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது.

இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!..., இதென்ன இப்படி ஒரு டுபாக்கூர் சம்பவத்தை கதை கட்டுறானேன்னு நினைக்கிறீங்களா?.

இது நிஜமாகவே நடந்த உண்மை, நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.

நான் யோசிக்கிறது என்னன்னா அந்த ஹீரோ இராஜேஷ்கன்னாவா? இல்லை தர்மேந்திராவா அப்படிங்கிறதைத்தான்!!!!!!!!!!!!!!!!!

பிராமணர்கள் கோழைகள் இல்லை!

Posted on Sunday, December 14, 2008 by நல்லதந்தி




ஜெமினிகணேசனைப் பொறுத்த வரையில் அவர் “சாம்பார்” என்ற ஒருஅடை மொழி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.அது அவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் எனபதால் ,அவ்ரைக் கீழ்மைப் படுத்த இருக்கலாம்.ஆனால் சாம்பார் என்ற பெயர் வந்த காரணம் வேறு என்று நான் இதே இணையத்தில் படித்திருக்கிறேன்.அது ஏதோ ஒரு திரைப் படத்தின் மூலமாக வந்தது என அறிகிறேன்.ஆனால் அது கோழை என்று அடைமொழியாகி அவர் சார்ந்த வகுப்பை கிண்டலடிக்க தி.க.,திமுக, கும்பல்களுக்கு உதவின.நிஜத்தில் அவர் அன்றைய காலத்தில் இருந்த மற்ற நாயக நடிகர்களை விட அதி தைரியசாலி என்பதே உண்மை.

விஜயா-வாஹினி புரெடெக்‌ஷன் சார்பில் ,அவர்கள் தயாரித்த இரு மொழி படத்தில் ஹீரோ மாடியில் இருந்து குதிக்கும் காட்சி ஒன்றுண்டு.அந்தப் படத்தில் தமிழில் நாயகனாக நடித்த ஜெமினி கணேசன்.இருபதடி உயரத்தில் இருந்து அநாவசியமாகக் குதித்தார்.அதன் தெலுங்குப் பதிப்பில் நடித்த என்.டி.ராமராவ் சிறிது தயக்கப் படவே அவருக்குப் பதிலாக ஜெமினி கணேசன் மாடியில் இருந்து குதித்து டூப்பாக நடித்தார்.ஆக திரையுலகில் டூப்பாக ஒரு பிரபநடிகருக்கு மற்றொரு பிரபலம் நடித்தது.அதுவே முதல் முறை.ஒருவேளை கடைசி முறையாகவும் இருக்கலாம்.அடுத்த மேட்டர்.........................

ஜூபிடர் பிக்சர்ஸின் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள’ படத்திற்கென ஒரு போர்காட்சி நெப்டியூனில் படமாகி வந்தது.அப்பொழுது, நட்சத்திரங்களில் மிகவும் அதிக நெஞ்சுத் துணிவுள்ள பேர்வழி யார் என்பதைப் பற்றி கேள்வி வந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகரைச் சொன்னார்கள்.அந்த சமயம் அங்கே இருந்த ஒர் இளம் நாடிகர் புன் சிரிப்புடன்,” நான் கூறட்டுமா?,அந்த துணிச்சல் நடிகர் யாறென்று!” என்று கூறி விட்டு “ஜெமினி கணெசனின் துணிச்சல் யாருக்கும் வராது,” என்று சொல்லி பின் கண்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சியை விவரித்தார்.

புதுக்கோட்டை ராஜவம்சத்தைச் சேர்ந்த நடுத்துரை என்பவர் அப்போது தங்கியிருந்தார்.அவர் ஜெமினிகணேசனின் நெருங்கிய நண்பர்.தமது நண்பரைப் பார்க்க போயிருந்தார். நடுத்துரை பேச்சோடு பேச்சாக, ” நீங்கள் சினிமாவில் பல துணிகரச் செயல்கள் செய்வதல்லாம் வெறும் நடிப்புத்தானே?,” என்று கேட்டார்.

“நிஜமாய் எனக்கு மனோ தைரியம் உண்டா என்று பார்க்க ஒரு பரிட்சை வேண்டுமானால் வையுங்களேன்” என்றார் ஜெமினி கணேசன்.நடுத்துரை உடனடியாக ஒரு பரிட்சை வைத்து விட்டார்.

ஜெமினிகணேசனை உட்கார வைத்துஅவர் வாயில் ஒரு சிகரெட்டை வைத்தார் நடுத்துரை.நண்பர் நடுத்துரை குறி பார்த்து சுடுவதில் சூரர்.தொலைவில் பக்கவாட்டாக அமர்ந்திருந்த ஜெமினி கணெசனின் உதட்டிலிருந்த சிகரெட்டைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார்.தோட்டா தன்னை நோக்கி பறந்து வரும் வேளையிலும் கொஞ்சம் கூட ஆடாமலும்,அசையாமலும் இருந்த ஜெமினியியின் துணிச்சலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.

குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!

Posted on Friday, December 12, 2008 by நல்லதந்தி



ஊட்டி,குன்னூர் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளைப் படமாக்க அதிகாரிகளின் அனுமதி தேவை.அனுமதியை வாங்க தேவர் கையாளும் முறை மிகுந்த ரசமாக இருக்கும்.

முதலில் தேவர் அதிகாரியிடம் போவார்.(தொடர்ந்து தேவர் அப்பகுதிகளிலேயே படங்கள் தயாரித்து வருவதால் அனேகமாக அதிகாரிகள் அனைவரும் அவருக்குத் தெரிந்தவர்களே.

“முருகா” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு,அதிகாரியினுடைய காலடியில் கீழே உட்கார்ந்து விடுவார்.”என்னங்க இது,எழுந்திருந்து மேலே உட்காருங்க!” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா!’ என்று கூறித் த்ம்மை தாம் யார்,வந்த விஷயம் என்ன என்ற விவரங்களைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்.

ஒருக்கால் அதிகாரி,”அது மிகவும் ஆபத்தான இடம் அனுமதி அளிக்க இயலாது” என்று மறுத்து விட்டால்,தேவர் விட்டு விடமாட்டார்.

மறுநாள் நேரே அதிகாரியின் வீட்டிற்குப் போய்விடுவார்.அதிகாரியின் மனைவியைப் போய் பார்ப்பார்.”முருகா!” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்?” என்று பாவத்துடன் சொல்வார்.அதிகாரியின் மனைவி சுவாரஸ்யமாகக் கேட்டு, “ச்சூ...ச்சூ..” என்று சூள் கொட்டுவார்.அந்த நேரம் பார்த்து, “இந்த மாதிரியான கட்டத்தைப் படமாக்க அந்தக் காடுதான் சரியான இடம்.உங்க வீட்டுக்காரர் அனுமதி மறுக்கிறாரே” என்று முடிப்பார்.

அவ்வளவுதான் அந்த அம்மாள் சிபாரிசில் அதிகாரியின் அனுமதியுடன் தம்பதிகளுக்கு ஒரு “முருகா” போட்டு விட்டு வெற்றியுடன் திரும்புவார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு படத்துக்கு குந்தா அணைக்கட்டுக்கருகில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.கதாநாயகன் கோஷ்டியுடன்,எதிரிகளின் நூற்றுக் கணக்கான வாள் வீரர்கள் மோதும் காட்சி அது.சிப்பாய்களுக்கான உடைகளையெல்லாம் தயார் படுத்தி விட்டனர்.ஆனால் சிப்பாய்களாக வேஷம் போட ஆட்களைத்தான் காணோம்.

தேவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியாமலேயே இருந்தது.ஆனால் கூட வந்த நடிகர்கள் அனைவரும் ஆர்ச்சரியப் படும் படி சிப்பாய்களாக நடிக்க ஆட்களைக் கொண்டு வந்து அக்காட்சியைப் படமாக்கி விட்டார்.

அவர் எங்கிருந்து,எப்படி ஆட்களைத் தேடிப்பிடித்தார் என்பது பிறகு தெரிய வந்தது.குந்தா அணைக் கட்டு வேலையையே ஒரு நாள் நிறுத்தி விட்டார்.அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களை எல்லாம் ஒரு நாள் லீவு போட வைத்து ,அவர்களுக்குச் சிப்பாய் உடைகளை மாட்டி,கையில் கத்தியையும் கொடுத்து விட்டார்.

வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.

பத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகைப்படம்!

Posted on Tuesday, December 9, 2008 by நல்லதந்தி




எழுத்தாளர் புதுமைப்பித்தனுடன் இருந்த போது நடந்த பல ரசமான நிகழ்ச்சிகளை நடிகர் சந்திரபாபு கூறினார்.அவைகளில் இதுவும் ஒன்று.

புதுமைப்பித்தன் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.இருமல் வியாதியால் பீடிக்கப் பட்டிருந்த எழுத்தாளரும்,சந்திரபாபுவும் டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.

எழுத்தாளரின் வரவிற்காக ஒரு பத்திரிகாசிரியர் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்.

“அட்டை படமாகப் வெளியிட உங்கள் போட்டோ ஒன்று தேவை” என்று புதுமைப் பித்தனிடம் அவர் கேட்டார்.

புதுமைப்பித்தன் தமக்கே உரித்தான வரட்டுச் சிரிப்பை சிரித்துவிட்டு “என்னிடம் இப்போது ஒரே ஒரு போட்டோதான் இருக்கிறது.அதுவும் உங்களுக்குப் பயன்படாது!” என்றார்.

வந்தவர் விடுவதாக இல்லை. “பரவாயில்லை.அதையே கொடுங்கள்.நான் எதாவது செய்து சரிப்படுத்திக் கொள்கிறேன்.” என்றார்.

புதுமைப்பித்தன் மறுக்கவே வந்தவர் தருமாறு வற்புறித்தினார்.

“சரி, சொன்னால் கேட்க மாட்டீர்கள்.” என்றபடி ஒரு பெரிய கவரைப் பத்திரிகாசிரியரிடம் கொடுத்தார்.அதனுள் இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தார் வந்தவர்.உடனே திரு திருவென்று விழித்தார்.

அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!

அரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா!

Posted on Sunday, December 7, 2008 by நல்லதந்தி




கோல்டன் ஸ்டூடியோவில் ‘சந்திரகாந்தா’படப்பிடிப்பு  நடந்து கொண்டிருந்த  சமயம்அது.காவி உடைகளும்,திரு நீர்ப்பூச்சும் நீண்ட தாடியும் துலங்க, ‘போலிச்சாமியார் வேடத்திலிருந்தார்.டி.எஸ்.பாலையா.

அன்றைய காட்சியில் சாமியாரின் காதலியாய் நடித்த வனஜா, ‘நீங்க இப்படியே போனீர்களானால் உங்களைப் பார்த்து ஜனங்களெல்லாம் உங்கள் காலில் விழுந்து கும்பிடுவார்கள்’ என்று பாராட்டினார்.

அதற்கு பாலையா,’ நன்றாய்ச் சொன்னீர்கள்!.என் மேல் விழுந்து எலும்பை எண்ணி விடுவார்கள்.கால்ம் மாறிவிட்டதம்மா!.போலிகள் பிழைக்க முடியாது என்றார்.

-------------------------------------------------------------------------------------------------


புத்தா பிச்சர்ஸ் படத்தில் நடிக்க வந்திருந்த டி.எஸ்.பாலையா வெற்றிலை போடவென வெளியே வந்த போது அருகில் இருந்த நண்பர் ஒருவரின் கையில் இருந்த தினசரியை வாங்கிப் பார்த்தார்.

அதில் நடிகர் சிவதாணு ஒரு திருடனைப் பிடித்துக் கொடுத்ததற்கு,போலீஸ் இலாகா அவருக்குச் சன்மானம், அளித்த செய்தி வெளி வந்து இருந்தது.


‘இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குப் ப்ழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது’ எனக்கூறி அதைச் சொன்னார் பாலையா.

‘அப்போது அது அரிசி ரேஷன் இருந்த சமயம்.நான் நிறையப் படங்களில் போலீஸ்காரனாக நடித்து வந்த சீசன். சேலத்திலிருந்து திருச்சிக்குக் காரில் வந்து கொண்டிருந்தேன்.

‘இரவு நேரம்.கார் திம்மாச்சி புரம் அருகே வந்ததும்,ஆட்கள் பலர் தலையில் மூட்டையைச் சுமந்து பதுங்கி பதுங்கிப் போவதைப் பார்த்தேன்.எனக்குச் சந்தேகம் ஏற்ப்பட்டதும்,காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினேன்.போலீஸ் உடுப்பு வேறு போட்டிருந்தேன்.மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே வந்துக் கொண்டிருந்த்தேன்.என்னைக் கண்டத்தும் அவர்கள் மூட்டையைக் கீழேப் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.அவ்வளவும் கறுப்புச் சந்தை வியாபாரத்துக்காக கடத்தப் படும் அரிசி! மூட்டைகள்.

‘கையில் இருந்த டார்ச் லைட்டைப் போட்டேன்.ஒரு பெரிய மரத்தின் மறைவில் கைகால்கள் தந்தி அடிக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.நான் அருகே போனதும்,ஐயா,இதை நீங்களே எடுத்துக்கிட்டுப் போங்க.என்னை விட்டுடுங்க’, என்று கெஞ்சினான்.

‘இனிமேல் இந்த மாதிரிச் செய்யாதீங்க ‘ என்று எச்சரித்து விட்டு போலீஸ் முறுக்கோடு மூட்டைகளை விட்டு விட்டு என பயணத்தை மேல தொடர்ந்தேன் என்று கூறினார் பாலையா!.


நடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே!

Posted on Saturday, December 6, 2008 by நல்லதந்தி

பி.வி.என். புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.


குலதெய்வம் ராஜகோபால் சொன்ன பல ரசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

கலைவாணரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒருத்தி அங்கு வந்தாள்.”மவராசா! நிறைமாதக் கர்பிணி ஆஸ்பத்திரிக்கு போகணும் ,உதவுங்கள் “என்று கேட்டாள்.

கலைவாணரோ அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தார்.அவள் துடித்த துடிப்பையும்,கிருஷ்ணன் அவர்களின் அலட்சியத்தையும் கண்டு எனக்குக் கோபம் கோபமாக வந்தது.கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் கலைவாணர் இந்தக் கர்பிணி விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று நான் அவசரப் பட்டேன்.

அவரோ சிறிது கூடப் பதட்டம் காட்டவில்லை.நான்கணா நாணயம் ஒன்றை ஒரு பக்கம் வைத்தார்.ஐந்து ரூபாய் நோட்டென்றை மற்றொரு பக்கம் வைத்தார்.         ”இந்தாம்மா,நீ நிஜமாகவே கர்பிணியாக இருந்தா இந்த நாலணாவை எடுத்துக்க,வேஷம் போடறவளா இருந்தா ஐந்து ரூபாயை எடுத்துக்க” என்று சொன்னார்.

அந்தப் பெண்ணோ,”சாமி,நீங்க இப்படிச் சோதிக்கலாமுங்களா?” என்று சொன்னாளேத் தவிர எதையும் தொடவில்லை.அவளது பார்வை மட்டும் ஐந்து ரூபாய் நோட்டின் மேலேயே பதிந்திருந்தது.

கொஞ்ச நேரத்துக் பின் தான் எனக்கு எல்லாமே விளங்கியது.அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த கந்தைகளை ஒவ்வொன்றாகக் களைந்தப் பிறகுதான் அவள் ஏமாற்று வேஷம் போட்டு இருக்கிறாள் என்பது தெரிந்தது.

கலைவாணர் அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து”இன்றோடு இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடு “,என்று சொல்லி அனுப்பினார்.

நான் என்னுடைய அவசர முடிவுக்காக வருந்தினாலும்,”அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏன் ஐந்து ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கோபமாய் கேட்டேன்.

“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.