Showing posts with label என்.எஸ்.கே. Show all posts
Showing posts with label என்.எஸ்.கே. Show all posts

குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!

Posted on Friday, December 12, 2008 by நல்லதந்தி



ஊட்டி,குன்னூர் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளைப் படமாக்க அதிகாரிகளின் அனுமதி தேவை.அனுமதியை வாங்க தேவர் கையாளும் முறை மிகுந்த ரசமாக இருக்கும்.

முதலில் தேவர் அதிகாரியிடம் போவார்.(தொடர்ந்து தேவர் அப்பகுதிகளிலேயே படங்கள் தயாரித்து வருவதால் அனேகமாக அதிகாரிகள் அனைவரும் அவருக்குத் தெரிந்தவர்களே.

“முருகா” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு,அதிகாரியினுடைய காலடியில் கீழே உட்கார்ந்து விடுவார்.”என்னங்க இது,எழுந்திருந்து மேலே உட்காருங்க!” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா!’ என்று கூறித் த்ம்மை தாம் யார்,வந்த விஷயம் என்ன என்ற விவரங்களைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்.

ஒருக்கால் அதிகாரி,”அது மிகவும் ஆபத்தான இடம் அனுமதி அளிக்க இயலாது” என்று மறுத்து விட்டால்,தேவர் விட்டு விடமாட்டார்.

மறுநாள் நேரே அதிகாரியின் வீட்டிற்குப் போய்விடுவார்.அதிகாரியின் மனைவியைப் போய் பார்ப்பார்.”முருகா!” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்?” என்று பாவத்துடன் சொல்வார்.அதிகாரியின் மனைவி சுவாரஸ்யமாகக் கேட்டு, “ச்சூ...ச்சூ..” என்று சூள் கொட்டுவார்.அந்த நேரம் பார்த்து, “இந்த மாதிரியான கட்டத்தைப் படமாக்க அந்தக் காடுதான் சரியான இடம்.உங்க வீட்டுக்காரர் அனுமதி மறுக்கிறாரே” என்று முடிப்பார்.

அவ்வளவுதான் அந்த அம்மாள் சிபாரிசில் அதிகாரியின் அனுமதியுடன் தம்பதிகளுக்கு ஒரு “முருகா” போட்டு விட்டு வெற்றியுடன் திரும்புவார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு படத்துக்கு குந்தா அணைக்கட்டுக்கருகில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.கதாநாயகன் கோஷ்டியுடன்,எதிரிகளின் நூற்றுக் கணக்கான வாள் வீரர்கள் மோதும் காட்சி அது.சிப்பாய்களுக்கான உடைகளையெல்லாம் தயார் படுத்தி விட்டனர்.ஆனால் சிப்பாய்களாக வேஷம் போட ஆட்களைத்தான் காணோம்.

தேவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியாமலேயே இருந்தது.ஆனால் கூட வந்த நடிகர்கள் அனைவரும் ஆர்ச்சரியப் படும் படி சிப்பாய்களாக நடிக்க ஆட்களைக் கொண்டு வந்து அக்காட்சியைப் படமாக்கி விட்டார்.

அவர் எங்கிருந்து,எப்படி ஆட்களைத் தேடிப்பிடித்தார் என்பது பிறகு தெரிய வந்தது.குந்தா அணைக் கட்டு வேலையையே ஒரு நாள் நிறுத்தி விட்டார்.அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களை எல்லாம் ஒரு நாள் லீவு போட வைத்து ,அவர்களுக்குச் சிப்பாய் உடைகளை மாட்டி,கையில் கத்தியையும் கொடுத்து விட்டார்.

வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.

நடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே!

Posted on Saturday, December 6, 2008 by நல்லதந்தி

பி.வி.என். புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.


குலதெய்வம் ராஜகோபால் சொன்ன பல ரசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

கலைவாணரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒருத்தி அங்கு வந்தாள்.”மவராசா! நிறைமாதக் கர்பிணி ஆஸ்பத்திரிக்கு போகணும் ,உதவுங்கள் “என்று கேட்டாள்.

கலைவாணரோ அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தார்.அவள் துடித்த துடிப்பையும்,கிருஷ்ணன் அவர்களின் அலட்சியத்தையும் கண்டு எனக்குக் கோபம் கோபமாக வந்தது.கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் கலைவாணர் இந்தக் கர்பிணி விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று நான் அவசரப் பட்டேன்.

அவரோ சிறிது கூடப் பதட்டம் காட்டவில்லை.நான்கணா நாணயம் ஒன்றை ஒரு பக்கம் வைத்தார்.ஐந்து ரூபாய் நோட்டென்றை மற்றொரு பக்கம் வைத்தார்.         ”இந்தாம்மா,நீ நிஜமாகவே கர்பிணியாக இருந்தா இந்த நாலணாவை எடுத்துக்க,வேஷம் போடறவளா இருந்தா ஐந்து ரூபாயை எடுத்துக்க” என்று சொன்னார்.

அந்தப் பெண்ணோ,”சாமி,நீங்க இப்படிச் சோதிக்கலாமுங்களா?” என்று சொன்னாளேத் தவிர எதையும் தொடவில்லை.அவளது பார்வை மட்டும் ஐந்து ரூபாய் நோட்டின் மேலேயே பதிந்திருந்தது.

கொஞ்ச நேரத்துக் பின் தான் எனக்கு எல்லாமே விளங்கியது.அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த கந்தைகளை ஒவ்வொன்றாகக் களைந்தப் பிறகுதான் அவள் ஏமாற்று வேஷம் போட்டு இருக்கிறாள் என்பது தெரிந்தது.

கலைவாணர் அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து”இன்றோடு இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடு “,என்று சொல்லி அனுப்பினார்.

நான் என்னுடைய அவசர முடிவுக்காக வருந்தினாலும்,”அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏன் ஐந்து ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கோபமாய் கேட்டேன்.

“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.