Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

தேவரின் திருமுகமும், கொடு முகமும்!

Posted on Sunday, July 12, 2009 by நல்லதந்தி




நண்பர் RV எழுதிய இடுகையைப் பார்த்ததும் வந்த நினைவுகளால் எழுதியது!. முன்பே தேவரைப் பற்றி என்னுடைய இடுகை.

இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!.

ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம்.

முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது.

இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!.

இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!.
நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்‌ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.



ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.
தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு.

பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின.

ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது.

இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!..., இதென்ன இப்படி ஒரு டுபாக்கூர் சம்பவத்தை கதை கட்டுறானேன்னு நினைக்கிறீங்களா?.

இது நிஜமாகவே நடந்த உண்மை, நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.

நான் யோசிக்கிறது என்னன்னா அந்த ஹீரோ இராஜேஷ்கன்னாவா? இல்லை தர்மேந்திராவா அப்படிங்கிறதைத்தான்!!!!!!!!!!!!!!!!!

இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி



ஆதரவற்று ரயில் நிலையத்தில் தவித்த ஐந்து வயது இந்துக்குழந்தையை வளர்த்து வந்தார் முஸ்லிம் மேஜிக் நிபுணர்; 13 ஆண்டுகள் கழித்து திடீரென போலீஸ் தலையிட்டு தந்தை - மகளை பிரித்ததும், கோர்ட்டுக்கு போய் போராடி மீட்டார்!இரு வேறு பட்ட மதமாக இருந்தாலும், மனம் குறுக்கே வரும் போது, மதம் பெரிய விஷயமல்ல என்பதை இந்த தந்தை - மகள் நிரூபித்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காத்ரி; மேஜிக் நிபுணர். மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி யில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்தார். ஊர் திரும்புவதற்காக ரயிலில் ஏறும் போது, பிளாட்பாரத்தில், ஒரு குழந்தை அழுதபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தது.அரை மணி நேரமாக அதை கண்காணித்து வந்த காத்ரிக்கு அதை விட்டுப்போக மனதில்லை. அதன் அருகே சென்று, குழந்தையிடம் விசாரித்தார். அதற்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை.


யாரோ தன்னை பிளாட்பாரத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டதாக கூறியது.எல்லா பிளாட்பாரங்களிலும் சென்று தேடியும் குழந்தையுடன் வந்தவர்களை காணவில்லை. அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை காத்ரிக்கு. தன்னுடன், ரயிலில் அழைத்துச் சென்றார். பெயரை கேட்டபோது, வர்ஷா என்று கூறியது; எல்லாரும் தன்னை முன்னி என்று செல்லமாக அழைப்பர் என்றும் கூறியது. இந்த சம்பவம் நடந்தது 1995ம் ஆண்டில்.


குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள தன்காரியா என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். வர்ஷாவை அவர் தன் மகளை போல வளர்த்துவந்தார். பின், அவர்கள், ஆமதாபாத் மாவட்டம், ரமோல் என்ற இடத்தில் குடியேறினர்.தன்காரியா கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வர்ஷா வளர்ப்பு மகள் என்பது தெரியும். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் வர்ஷாவுடன் பகக்கத்து வீட்டுக் குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் பழகி வந்தனர்.


இந்நிலையில், சில மாதங்கள் முன், அக்கா,தம்பி இருவரும் தங்கள் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள காத்ரி வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் விஷயத்தை கேள்விப்பட்ட காத்ரி, வீட்டில் தங்கிக் கொள்ளச்சொன்னார். அவர்களை சமாதானப்படுத்தி அப்பாவிடம் ஒப்ப டைக்க முடிவு செய்தார். இதற்குள், அவர்களின் அப்பா, தன் மகள், மகன் இருவரையும் காத்ரி தான் கடத்தி வைத்திருக்கிறார்; அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீசில் புகார் செய்தார்.


காத்ரி வீட்டுக்கு வந்த போலீஸ், அங்கிருந்த அக்கா, தம்பியை மீட்டு, அவர்களின் பெற் றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்து, அவள் சொந்த மகள் இல்லை என்று தெரிந்ததும், அவளை அரசு காப்பகத்தில் சேர்த்து , காத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் காத்ரி வழக்கு போட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், வளர்ப்பு மகளாக வர்ஷா மீது உரிமை கோர முடியாது என்று கூறி அவர் மனுவை கோர்ட் நிராகரித்தது.


செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் காத்ரி. அவர் மனுவை ஏற்ற கோர்ட்," இத்தனை ஆண்டுகள் காத்ரியிடம் வளர்ந்துவந்த வர்ஷாவை அவரிடம் ஒப்படைத்து விடலாம்; இதற்கான உரிய ஆவணங்களை அவர் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் காத்ரி, - வர்ஷா ஒன்று சேர்ந்தனர். "என் பாச மகள் கிடைத்து விட்டாள்; அது போதும்' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் காத்ரி.


நன்றி: தினமலர்