இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி



ஆதரவற்று ரயில் நிலையத்தில் தவித்த ஐந்து வயது இந்துக்குழந்தையை வளர்த்து வந்தார் முஸ்லிம் மேஜிக் நிபுணர்; 13 ஆண்டுகள் கழித்து திடீரென போலீஸ் தலையிட்டு தந்தை - மகளை பிரித்ததும், கோர்ட்டுக்கு போய் போராடி மீட்டார்!இரு வேறு பட்ட மதமாக இருந்தாலும், மனம் குறுக்கே வரும் போது, மதம் பெரிய விஷயமல்ல என்பதை இந்த தந்தை - மகள் நிரூபித்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் காத்ரி; மேஜிக் நிபுணர். மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி யில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்தார். ஊர் திரும்புவதற்காக ரயிலில் ஏறும் போது, பிளாட்பாரத்தில், ஒரு குழந்தை அழுதபடி அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தது.அரை மணி நேரமாக அதை கண்காணித்து வந்த காத்ரிக்கு அதை விட்டுப்போக மனதில்லை. அதன் அருகே சென்று, குழந்தையிடம் விசாரித்தார். அதற்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை.


யாரோ தன்னை பிளாட்பாரத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டதாக கூறியது.எல்லா பிளாட்பாரங்களிலும் சென்று தேடியும் குழந்தையுடன் வந்தவர்களை காணவில்லை. அந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர மனதில்லை காத்ரிக்கு. தன்னுடன், ரயிலில் அழைத்துச் சென்றார். பெயரை கேட்டபோது, வர்ஷா என்று கூறியது; எல்லாரும் தன்னை முன்னி என்று செல்லமாக அழைப்பர் என்றும் கூறியது. இந்த சம்பவம் நடந்தது 1995ம் ஆண்டில்.


குஜராத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள தன்காரியா என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். வர்ஷாவை அவர் தன் மகளை போல வளர்த்துவந்தார். பின், அவர்கள், ஆமதாபாத் மாவட்டம், ரமோல் என்ற இடத்தில் குடியேறினர்.தன்காரியா கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வர்ஷா வளர்ப்பு மகள் என்பது தெரியும். எனினும், அதை பெரிதுபடுத்தாமல் வர்ஷாவுடன் பகக்கத்து வீட்டுக் குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி இருவரும் பழகி வந்தனர்.


இந்நிலையில், சில மாதங்கள் முன், அக்கா,தம்பி இருவரும் தங்கள் அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு ஆமதாபாத்தில் உள்ள காத்ரி வீட்டுக்கு வந்து விட்டனர். அவர்களிடம் விஷயத்தை கேள்விப்பட்ட காத்ரி, வீட்டில் தங்கிக் கொள்ளச்சொன்னார். அவர்களை சமாதானப்படுத்தி அப்பாவிடம் ஒப்ப டைக்க முடிவு செய்தார். இதற்குள், அவர்களின் அப்பா, தன் மகள், மகன் இருவரையும் காத்ரி தான் கடத்தி வைத்திருக்கிறார்; அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீசில் புகார் செய்தார்.


காத்ரி வீட்டுக்கு வந்த போலீஸ், அங்கிருந்த அக்கா, தம்பியை மீட்டு, அவர்களின் பெற் றோரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் இருந்த வர்ஷாவை விசாரித்து, அவள் சொந்த மகள் இல்லை என்று தெரிந்ததும், அவளை அரசு காப்பகத்தில் சேர்த்து , காத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர்.இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் காத்ரி வழக்கு போட்டார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், வளர்ப்பு மகளாக வர்ஷா மீது உரிமை கோர முடியாது என்று கூறி அவர் மனுவை கோர்ட் நிராகரித்தது.


செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் காத்ரி. அவர் மனுவை ஏற்ற கோர்ட்," இத்தனை ஆண்டுகள் காத்ரியிடம் வளர்ந்துவந்த வர்ஷாவை அவரிடம் ஒப்படைத்து விடலாம்; இதற்கான உரிய ஆவணங்களை அவர் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் காத்ரி, - வர்ஷா ஒன்று சேர்ந்தனர். "என் பாச மகள் கிடைத்து விட்டாள்; அது போதும்' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் காத்ரி.


நன்றி: தினமலர்

2 Responses to "இந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் இது தான் இந்தியா!":

வால்பையன் says:

மனிதத்துக்கு முன்னால் மதமாவது மண்ணாங்கட்டியாவது

நல்லதந்தி says:

//வால்பையன் said...
மனிதத்துக்கு முன்னால் மதமாவது மண்ணாங்கட்டியாவது//

உண்மை! மதங்கள் மனிதர்களைப் பிரிக்கின்றன்.மனிதம் மனங்களை இணைக்கின்றது.