ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1

Posted on Wednesday, December 10, 2008 by நல்லதந்தி



இன்றல்லோ கம்பன்
இன்றல்லோ ராச சபைக்கு
ஏற்கு நாள் ---இன்றல்லோ
இறந்த நாள்;புன் கவிதை
பூ மடந்தை வாழ,
புவி மடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாங்கும் 
நாள்!

என்று ஒரு பாட்டு,கவிச்சக்ரவர்த்தி கம்பன் இறந்து பட்ட போது ஒரு கவிஞன் பாடியதாக வழங்கப் படுகிறது இந்தப் பாடல்.நண்பர் புதுமைப் பித்தன் இந்தப் பாடலை கம்பனேதான் பாடியிருக்கிறான் என்று சாதித்துக் கொண்டிருந்தார். சரசுவதியின் தாலிபாக்கியம் தறி பட்டுப் போயிற்று என்று கூற அவன் ஒருவனுக்குத்தான் அத்தனை தைரியமும்,துணிச்சலும்,கலைத் தேவியிடம் தோழமை உணர்ச்சியும் உண்டு என்பது அவர் வாதம்.

தனது கவிதையின் மேதாவிலாசம் உணரப்படாமல் போவதையும்,அதே வேளை வறட்டு வெள்ளைக் கவிகள் அம்பலமேறி அட்டகாசம் புரிவதையும் கம்பனும் அவன் ஆயுளிலேயே அனுபவித்தே இருப்பான்.அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே அவனே இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறான் என்று அழுத்திச் சொன்னார் புதுமைப்பித்தன்.இதை வலியுறுத்துவது போல,இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருச்சி வானொலி நிலையத்தார் புதுமைப் பித்தனுக்கு ஒரு வானொலிப் பேச்சுக்கு அழைப்பு அனுப்பினார்கள்’பாட்டு எப்படி பிறக்கிறது?’ என்பது பொருள்.

புதுமைப்பித்தன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்தப் பேச்சுக்காக எழுதிய எழுத்துப் பிரதியில் கம்பனைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைக் கூறி,வயிற்றெரிச்சலிலும் பாட்டு பிறக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அத்துடன் நில்லாமல்,கம்பனுக்கு ஏற்பட்டதைப் போல தன்னுடைய வயிற்றெரிச்ச்லையும் இப்படி ஒரு பாட்டாக அமைக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருச்சி ரேடியோ நிலையத்தில் பேசுவதற்காக இருந்த புதுமைப்பித்தன் அதற்கு முன்பே காலாவதியாகி விட்டால்?-- என்ற கேள்வியை அவரே எழுப்பிக்கொண்டு அப்போது தம் எதிரிகள் எத்தனை கும்மாளம் அடிப்பார்கள்,”பய போயித் தொலைஞ்சானா?” என்று எவ்வளவு நிம்மதியுடன் சொல்வார்கள்,புதுமைப் பித்தனின் மிதியடியின் காலடி ஓசையைக் காலனின் அடியோசையாகக் கேட்டுக் கிலியடைந்த இலக்கியப் போலிகள் எப்படி ஆனந்த பள்ளாட்டம் போடுவார்கள் என்பதையெல்லாம் கற்பித்துக் கொண்டு,அந்த வேளையில் புதுமைப் பித்தனின் நண்பர் ஒருவர் இந்த “நரியின் அம்பலக் கூத்தைக்’கண்டு வயிறெரிந்து,அந்த இலக்கியப் போலிகளைப் பார்த்துப் பாடுவதாக,புதுமைப் பித்தனே ஒரு பாட்டு பாடிவிட்டார்.

திருச்சிக்கு என்றான்;
தெந்திசைக்கே சென்று விட்டான்
கிரிச்சிச் சடாச் சத்தம்
கேட்டாயோ?-உரிச்சி
வச்ச ம்டையா வக்கு
அத்த மடையா| எச்சிற்
காசுமடையா போ
டா!

என்று பாட்டு.வயிற்றெரிச்சலின் காரணமாக வல்லின ஓசை செவிட்டில் அறைந்தாற் போல் உறைத்து விழுந்து,எதுகை மோனை இலக்கணங்கள் தட்டழிந்து தறிகெட்டுத் தாவுகின்றனவாம்!

இந்தப் பாட்டுக்கும் திருச்சிக்கும் ஏதோ தெய்வீக சம்பந்தம் உள்ள மாதிரி,புதுமைப் பித்தன் சந்தர்ப்ப பேதத்தால் திருச்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது; அவருடைய பேச்சும் ஒலிபரப்பப் படாமல் நின்று விட்டது.

புதுமைப் பித்தன் கடைசிக் காலத்தில் திருச்சிக்குச் செல்லவில்லை,அதற்க்கும் தெற்கே திருவனந்தபுரத்துக்குத் தான் சென்றார்.ஆனால்,தமிழ்நாட்டின் சாபத்தீட்டு அவரை அதற்கும் தெற்கே-சென்றவர்கள் மீளாத தென் திசைக்கே--வழியனுப்பி விட்டது.ஆம் தமிழ்நாட்டு மறுமலர்ச்சியின் தனிக்காட்டு ராஜாவான புதுமைப் பித்தன் இந்த வருடம் 1948 வருஷம் ஜூன் மாசம் 31-ம் தேதியன்று காலமாகி விட்டார்.


சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன் திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற வேளாள குல ஆசாமி ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவிற்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்யோகம் பார்த்து வந்தார்.

அவர் அங்கு விருதாச்சலத்தில்,ஷதர் கோர்ட் கலெக்ட்டராக இருந்த வெள்ளைக் காரத் துரையிடம் நன் மதிப்பு பெற்று,பதவி உயர்வும் பெற்றார்.அச் சமயம் லகர ளகரம் நிறைந்து,வெள்ளைப் ப்ரங்கித் துரையின் வாயில் நுழையாத தம் பெயரை துரையவர்கள் உத்திரவுப் படி விருத்தாச்சலம் என்று மாற்றிக் கொண்டார்.இந்த விருத்தாச்சலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரன் தான் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன்.

உலகளந்த பெருமாள் பிள்ளையிம் காலம் தொடங்கி,அவர்களின் வமிச பரம்பரை சர்க்கார் ரெவினியூ இலாகாவில் உத்தியோகம் விகித்து,ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.புதுமைப் பித்தனின் தந்தையான ஸ்ரீ வி.சொக்கலிங்கம் பிள்ளை படித்து,பி.ஏ. பட்டம் பெற்று, ஸ்ரீமதி பர்வதம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்று, தென்னாற்காடு ஜில்லாவில் உத்தியோகம் பார்த்து வந்தார்.அப்போதுதான், 1906 ம் ஆண்டு கடலூருக்கருகில் உள்ள திருப்பாதிரிப் புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமாந்தப் புத்திரனாகப் பிறந்தார்.

தமிழ்நாட்டுச் சம்பிரதாயப்படி,புதுமைப் பித்தனுக்கு அவரது தாத்தா விருதாச்சலம் பிள்ளையின் பெயரே சூட்டப்பட்டது.ஸ்ரீ மதி பார்வதியம்மாள் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ருக்மணி என்ற செல்லத்தம்மாள் என்ற பெண் மகவை ஈன்றெடுத்து விட்டு 1914-ம் ஆண்டு தேக வியோகம் அடைந்து விட்டார்.அப்போது சொ.விருத்தாசலத்திற்கு வயது எட்டு; தாயின் பரிபூரணமான அன்பையும் பெற அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை.

தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் உத்யோகத்தின் ஸ்தல மாற்றங்கள் காரணமாக ,புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பும் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.ஸ்திரமற்ற படிப்பால், சொ.விக்கு ஆரம்பக் கல்வி ஒழுங்காக நடைபெறவில்லை.அவருடைய ஆரம்பப் படிப்பு செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் நடந்தேறியது.

“பள்ளிக் கூடத்தில் படிப்பதைவிட செஞ்சி மலைக் கோட்டையில் ஏறிச் சுற்றுவதுதான் எனக்கு பிடித்திருந்தது” என்று சொ.வியே குறிப்பிட்டார்.எனினும் பிறப்பால் அமைந்த புத்திக்கூர்மையால் பாடமும் படித்து வந்தார். ”பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பயல் கலிவெண்பாவை எடுத்து வைத்துக் கொண்டு பாராயணம் செய்வான்” என்று இன்றும் சொக்கலிங்கம் பிள்ளை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்.

1918-ம் வருஷம் சொக்கலிங்கம் பிள்ளை பென்ஷன் பெற்று,தமது பூர்விக நாடாகிய தென்பாண்டிச் சீமைக்கு-திருநெல்வேலிக்கு வந்து குடியேறினார். அப்போதுதான் சொ.வி.க்கு பனிரெண்டு நிரம்பி,பால்யத்தின் பேதமை மறைந்து அறிவு தெளிந்து வரும் பருவம்.திருநெல்வேலியில் தான் அவருடைய பள்ளிப் படிப்பும் ஸ்திரமாயிற்று.தமிழ் மொழி பொருப்பிலே பிறந்தாலும்,தென்னன் புகழிலே வளர்ந்தது போல்,சொ.வி. திருப்பாதிரிப் புலியூரில் பிறந்தாலும்,அவரை ஆளாக்கி விட்டது தென்னன் புகழ் படைத்த திருநெல்வேலிச் சீமைதான்.

சொ.வி.யின் பள்ளிப் படிப்பு திருநெல்வேலி கிறிஷ்தவத் திருச்சபையைச் சார்ந்த அர்ச்.யோவான் ஸ்தாபனக் கல்விக் கூடத்தில் தான் நடந்தேறியது.பள்ளியில் அவர் ஒவ்வொரு வகுப்பிலும் பல தடவை குட்டிக்கரணம் போட்டே வந்திருக்கிறார்.பள்ளிப் படிப்பு இந்தப் புள்ளிக்கு உதவாமல் போய்விட்டாலும் அனுபவக் கல்வியும் அதிகமாகவே அமைந்து வந்தது.பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குத் தயாரானதும் சொ.வி.யின் கல்விக்கூடம் யோவான் கலாசாலையில் இருந்து இந்துக் க்ல்லூரிக்கு மாறியது.திருநெல்வேலி ஜங்கஷ்னில் உள்ள இந்தக் கல்லூரியில் தான் கவிஞர் பாரதியும் கல்வி கற்றார்.இந்தக் க்ல்லூரியில் தான் பாரதி உபாத்தியாரைப் பார்த்து “காள மேகம் ஆசிரியரின் உத்திரவுக்கு பணிந்து மழை பொழியாது” என்று வீராப்புடன் பதிலளித்தார்.

மற்றவை அடுத்த இடுகையில்:-

3 Responses to "ஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1":

வால்பையன் says:

முழு வாழ்க்கையையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிறக்கிறது, இந்த பதிவை படிக்கும் போது,
விரைவில் வெளியிடவும்

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

நன்றி!

Anonymous says:

:)