10மணிக்கு கலைஞர் கவிதை|||10 மணிக்கு கரண்ட் போகணும் பெண்கள் கதறல்!

Posted on Sunday, September 7, 2008 by நல்லதந்தி



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை எளிய கவிதை நடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தாம் படைத்த சங்கத்தமிழிலிருந்து முதல்-அமைச்சர் கருணாநிதி `கள் உண்ட கடுவன்!' என்ற கவிதையை வழங்குகிறார்.

சங்கத்தமிழ்ப் புலவர் கபிலர் பாடிய அகநானூற்றுப் பாடலை, கடுவன் ஒன்று கள் உண்டு மயங்கிக் கண்ணுறங்கிக் கிடந்த காட்சியைக் கண்ட புலவர் கபிலர், அதன் காரணத்தை ஆராய்ந்து தெளிந்த நிகழ்வைத் தன் கற்பனைத் தேரோட்டி அற்புதக் கவிதையாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதியின் சங்கத்தமிழிலிருந்து `பாறையில் உருகுது பசு வெண்ணெய்!' என்ற கவிதையை வழங்குகிறார். வணங்காமுடி எனும் சங்க காலத்துப் பெருவீரன் தனக்கு அறிவுரை நல்கிடும் அன்பு நண்பனின் செயலைப் பாறையில் உருகும் பசு வெண்ணெய்க்கு உவமைகாட்டிக் குறுந்தொகையில் புலவர் வெள்ளிவீதியார் பாடிய பாடலை, காதல் துயருற்றக் காளை ஒருவனின் மனநிலையை நெஞ்சம் நெகிழ வைக்கும் கவிதைப் புதையலாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

மேற்கண்ட தகவலை கலைஞர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


அடுத்த செய்தி!


தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு முன் மின்தடை செய்யப்படுவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வது பாதிக்கப்படுகிறது என பெண்கள் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்தது, காற்று வீசுவது குறைந்தது போன்ற காரணங்களால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் பெற்று வந்துள்ளார். இது மின் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க உதவும்.

காலை 10 மணிக்கு முன்பு மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் புகார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் காலையிலேயே சமையல் செய்து உணவு கொடுத்து அனுப்புவது காலை நேர மின்வெட்டால் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று பெண்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலை 10 மணிக்கு முன்பு மின்வெட்டு அமல்படுத்துவதை தவிர்த்து, 10 மணிக்கு மேல் மட்டுமே மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

4 Responses to "10மணிக்கு கலைஞர் கவிதை|||10 மணிக்கு கரண்ட் போகணும் பெண்கள் கதறல்!":

Anonymous says:

it is really worst govt.

வெண்பூ says:

செம நக்கல்... :)

Anonymous says:

10 மணிக்கு என்றால் காலையிலா? இரவா? :)

Anonymous says:

கள்ளுண்ட கிழவன் என்று தவறுதலாகப் படித்துவிட்டேன்