தயாளு அம்மையாரைப் பகுத்தறிவாளராக்கி சாதனை செய்ததால் கலைஞருக்கு பகுத்தறிவு ஸ்வார்டு! மக்கள் மகிழ்ச்சி வெள்ளதில் செத்தனர்!

Posted on Monday, September 8, 2008 by நல்லதந்தி



பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ``சமூக நீதிக்கான வீரமணி விருது'' வழங்கும் விழா நேற்று பெரியார் திடலில் நடந்தது. மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் இந்த விருதையும், ரூ.1 லட்சம் காசோலையையும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.


விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-இங்கே வீரமணி பேசும் போது இது விருதல்ல, போர்வாள் என்றார். ஆங்கிலத்தில் இந்த சொல்லை மாற்றிச் சொன்னால் இது அவார்டு அல்ல, ஸ்வார்டு. இந்த வாளை நான் பெரியாரிடத்திலே பெற்று பல்லாண்டு காலம் பகுத்தறிவுவாதியாக, சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் நீங்களும் எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறீர்கள்.


இவருடைய வயதென்ன, பதவி என்ன, இவர் போய் வீரமணி பெயரால் ஒரு விருது வாங்குவதா? என்று சிண்டு முடிகிறவர்கள் பேசக்கூடும், எழுதக் கூடும். தகுதியானவர் பெயரால் தான் இந்த விருதை வாங்கியிருக்கிறேன்.


சுயமரியாதை, சமூக நீதியில் அக்கரையுள்ளவன் என்பதால் மட்டுமல்ல, இதற்காக தொடர்ந்து போராடுபவன் என்பதற்காக இந்த விருது வழங்கியிருப்பதை நான் மறந்து விடவில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற நண்பர்கள் என்றாலும் நம்மை இணைக்கிற கொள்கை உள்ளவர்களால் வீரமணி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.


1920-ம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கிற சமூக நீதிக்கான போரை வேகப்படுத்தி பல வெற்றிகளை பெற்ற பெரியார், அண்ணா ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற எங்களுக்கும் இந்த உரிமை உண்டு. இந்த போராட்டம் முற்று பெற்றுவிட்டதா என்றால் இல்லை. இன்னும் போராடு என்று ஊக்கப்படுத்துகிற விதத்தில் தான் இந்த விருதை தந்திருக்கிறீர்கள்.


பெரியாருக்கு பின்னர் இந்த இயக்கம் அழிந்துவிட்டதா - போய்விட்டதா - போகக் கூடாதா - என்று எண்ணுகிறவர்களுக்கு பெரியாருக்கு பின்னர் வீரமணி - அவருக்கு பின்னரும் ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது, அழியாது என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.


மாணவப் பருவத்திலேயே எப்படியோ என் உள்ளத்தில் இந்த சுயமரியாதை ஒட்டிக் கொண்டு என்னை வளர்த்திருக்கிறது. மூட நம்பிக்கைகள் உள்ள சின்ன ஊரில் பிறந்தவன் நான். அங்கிருந்து வந்து பெரியாரால், அண்ணாவால் உருவாக்கப்பட்டு இப்போது உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன் என்றால் இது நான் பெற்ற பேறு அல்ல, பெரியார் தந்த அறிவு, அதன் விளைவு. இவைகளை எல்லாம் நானே தான் சிந்தித்தேன், நானே தான் செய்தேன் என்று சொல்வது சுலபம். ஆனால் எதிர்காலத்தில் வரலாற்றில் ஒரு பொய்யை சொன்னவன் என்ற நிலைக்கு ஆளாக விரும்பவில்லை.நான் தயாரிக்கப்பட்டவன். பெரியாரால் தட்டி தட்டி சீர் செய்யப்பட்டவன். அண்ணாவால் நான் வலுப்பெற்றவன். நீங்கள் தருகிற விருதை பெறுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எப்படிப்பட்ட உற்றார், உறவினர்களுக்கு மத்தியில் வளர்ந்தேன் என்று சொன்னால் தான், நாமும் பெரியார் விருது பெறலாம் என்று எண்ண முடியும்.


என் தந்தை முத்துவேலர் பிறக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஒவ்வொரு வருடமும் அவர் தனது தந்தைக்கு திவசம் புரோகிதரை வைத்து கொடுப்பார். நாம் வைக்கும் உணவை அவர் உண்டு நமக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை. இதை நான் பள்ளி சிறுவனாக இருந்த போதே எதிர்த்தவன். இதற்காக சில நேரம் அடியும் வாங்கியிருக்கிறேன்.ஒரு முறை புரோகிதர் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு மந்திரத்தை உளறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது தந்தை என் மகன் சொல்வது உண்மை தான் போலிருக்கிறது, எழுந்து ஓடிவிடு, இனி என் வீட்டில் திவசம், திதி எல்லாம் இல்லை என்றார்.


திருவாரூரில் ஒரு பயங்கர சடங்கு ஓங்காரம் என்று நடக்கும். நடுநிசியில் 10 பேர் கூடி `ஓம்' என்று கூச்சலோடு வலம் வருவார்கள். இந்த ஓங்காரத்தை மடக்குபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கையும், பயமுறுத்தலும் உண்டு. ஒரு நாள் இயக்க நண்பர்கள் இதை மறிக்கப் போகிறோம் என்று அறிவித்து மறித்தார்கள். அதோடு கலைந்து சென்றவர்கள், அதன் பின்னர் திருவாரூரில் ஓங்காரமே கிடையாது.எனது உறவினர் சொர்ணத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை துர்க்கை அம்மனின் பக்தர். அவர் ஒரு மந்திரவாதி எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்கிறார். அவரிடம் உன்னைப்பற்றி விசாரிக்கலாம் என்றார். நான் மறுத்தும் கேட்காமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு அவர் மந்திரவாதியிடம் பேசிக் கொண்டிருந்தார். மந்திரவாதியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.


கிருஷ்ணமூர்த்தி மந்திரவாதியிடம் எங்களுக்கு எத்தனை வீடுகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்க மந்திரவாதி அவரது மனைவியை பார்க்க, அந்த பெண் என்னைப் பார்க்க, நான் 5 விரலை காட்டினேன். அவரும் மந்திரவாதிக்கு சைகையில் 5 விரலை காட்ட மந்திரவாதி 5 வீடுகள் இருப்பதாக தவறாக கூறினார். அடுத்து எத்தனை மகன்கள் என்ற கேள்விக்கும் அதேமுறையில் ஒரு மகன் என்று தவறாக கூற இவன் சொல்வது சரிதான், எல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி மந்திரவாதியை விரட்டி விட்டார். அவர் இந்த குளறுபடிக்கு நான் தான் காரணம் என்று தெரிந்து கொண்டு இந்த பையன் 6 மாதத்தில் செத்துவிடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.இப்படி சுயமரியாதை ஏற்படக்கூடிய அளவுக்கு என்னிடம் மட்டுமல்ல, என்னை சுற்றியுள்ள பலருக்கும் ஏற்படக் கூடிய பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.


என்ன முக்கியமான காரணம் - நான் எஸ்.எஸ்.எல்.சி. தான். அதிலும் தோல்வி. இதற்காக யாரும் நாமும் எஸ்.எஸ்.எல்.சி. தேறவில்லை, நாமும் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. இந்த நிலைக்கு நான் வரக் காரணம் கருத்துக்கள், பகுத்தறிவு, பெரியார் ஏற்றி வைத்த சுடர் ஒளி.ஒரு இசைவாணர் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை என்னை ஒருவரிடம் நாதசுரம் பயில அனுப்பினார். நான் ஒரு நாள் சென்றுவிட்டு மறுநாள் இனி நான் அங்கு போகமாட்டேன் என்று கூறிவிட்டேன். காரணம் கேட்ட போது அவர் குருநாதர் - ஆனால் அங்கு அய்யர், முதலியார் என்று சிலர் வந்தால் அவர் தன் தோளில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறார். இது குருநாதருக்கு அவமானம் என்றேன்.


அதன் பின்னர் தான் என்னை திருவாரூரில் ஒரு பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு 8-ம் வகுப்பில் சேரவேண்டும் என்ற போது தேர்வு வைத்தனர். அதில் தேர்வாகாமல், 7-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், 6-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், இறுதியாக 5-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அதுவும் இதில் தேர்வாக்கவில்லை என்றால் எதிரில் உள்ள குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி சேர்ந்தேன்.


துண்டை தோளில் போட்டால் என்ன? இடுப்பில் கட்டினால் என்ன? இதில் என்ன சுயமரியாதை இருக்கிறது என்று நான் அப்போது எண்ணியிருந்தால், நான் இன்று இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டிருப்பேன். இந்த விருது பெறுவது சாதாரண விஷயமல்ல. அதுவும் திராவிட கழக தலைமைக் கழகத்தில் கொடுத்த இந்த விருது - விருதல்ல - போர்வாள் என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

4 Responses to "தயாளு அம்மையாரைப் பகுத்தறிவாளராக்கி சாதனை செய்ததால் கலைஞருக்கு பகுத்தறிவு ஸ்வார்டு! மக்கள் மகிழ்ச்சி வெள்ளதில் செத்தனர்!":

வால்பையன் says:

பதிவுக்கும் அந்த போட்டோவுக்கும் என்ன சம்பந்தம்?
மீண்டும் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை

Anonymous says:

தமிழ்மணத்துல உங்களுக்கு ஆப்பு வச்சுட்டங்கன்னு நினைக்குறேன்

நல்லதந்தி says:

//வால்பையன்
பதிவுக்கும் அந்த போட்டோவுக்கும் என்ன சம்பந்தம்?
மீண்டும் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை//

சிரிக்கிற மாதிரி ஒரு போட்டோ போடலாமன்னு பார்த்தேன்.அம்மா சிரிச்சது நல்லாயிருந்தது.பொருத்தமாவும் இருந்தது. அதான் :)

நல்லதந்தி says:

///தமிழ்மணத்துல உங்களுக்கு ஆப்பு வச்சுட்டங்கன்னு நினைக்குறேன்///
:((:((:((