கொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்!

Posted on Friday, March 27, 2009 by நல்லதந்தி





பாராளுமன்றத்தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. புதிதாக எம்.பி ஆகும் ஆசையுள்ளவர்கள் பணத்தைக் காட்டி சீட்டு வாங்க பறப்பதும், ஏற்கனவே எம்.பி ஆக உள்ள பழம் பெருச்சாளிகள் பணம் + தாங்கள் தொகுதிக்குச் செய்த சாதனைகளையும்(?) சொல்லி சீட்டு வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. தங்கபாலு செய்த சாதனை என்னத் தெரியுமா? 

பாராளுமன்ற இணையதளம் தருகிற தகவல்களின்படி, இரு தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லையாம். அவர்களில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவரும், சேலம் தொகுதி எம்.பியும், இரண்டு முறை இணை அமைச்சராக இருந்த திரு.தங்கபாலு!. 

ஒருவேளை இந்தச் சாதனையைச் சொல்லித்தான் இந்த முறை ஓட்டு கேட்கப் போகிறாரோ?. அட பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா?. 

கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!

Posted on Sunday, March 22, 2009 by நல்லதந்தி




1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்!

Posted on Tuesday, March 17, 2009 by நல்லதந்தி



பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கும் மிகவும் நியாயமாகப் படுகின்றன.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பல நன்மைகள் தமிழகத்திற்குக் கிடைக்குமாம். தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசை மிரட்டி மிரட்டி பல சலுகைகள் பெறலாமாம். முக்கியமான இலாகாக்களைப் பெற்று தமிழகத்தை முழு மூச்சாக முன்னேறச் செய்யலாமாம்.
எனவே ஒட்டு மொத்த தமிழக நலனுக்குக்காக அரசியல் மாறுபாடு இல்லாமல் இந்தக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டுகிறோம். இந்த வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளாவன. பின் வருமாறு:

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ளும் இல்லாவிட்டால் மத்திய அரசின் சிண்டையைப் பிடித்து உலுக்கப் படும்.

காவிரிப் பிரச்சனை மத்திய அரசால் தமிழகத்தின் பக்கமாக தீர்க்கப் படும்.

பாலாற்று பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் நலன் காக்க தீர்ப்பு கொடுக்கப் படும்.

சேது சமுத்திரத் திட்டம் ஒரே நாளில் முடிக்கப் படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு வாரத்தில் தீர்த்து வைக்கப் படும்.

சேலம் இரயில்வே கோட்டத்திற்கு கட்டிடங்கள் கட்ட எப்படியாவது 50 எக்கர் நிலம் கண்டு பிடிக்கப் படும். சேலத்தில் எங்குமே நிலம் இல்லாவிட்டால் கொட நாட்டில் ஜெயலலிதா வளைத்துப் போட்டுள்ள மக்கள் எஸ்டேட்டில் இருந்து 50 ஏக்கர் பறிமுதல் செய்து கோட்டத்துக்காக வழங்கப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்க வைக்கப்படும்.

என்னையா இது கிண்டல் பண்றீங்களா!, என்கிறீர்களா அப்பாவி மக்களே!.....

2004-ல் பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞரும், அடிப்பொடிகளும் மேற்கண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். வாக்குறுதிகளின் ஃபார்மெட் கொஞ்சம் முன்னே பின்னே மாறி இருக்கலாம்.

அந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.

மேற்கண்ட ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலும் வந்து விட்டது. இந்தத் தடவையும் இந்தக் கும்பல் இதே வாக்குறுதியுடன் ஓட்டுக் கேட்க வருவார்கள் என்பது நிச்சயம்.

கலைஞரைப் பொறுத்தவரை இந்த வாக்குறுதிகளை 2014 பாராளுமன்றத்தேர்தலிலும் உபயோகப் படுத்துவார். சொன்னதைச் செய்வார், செய்வதைச் சொல்வார் எங்கள் சொல்லின் செல்வர் கலைஞர்!.

சொன்னது போலவே திருமங்கலத்தில் அச்சடித்தாற் போல நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தனர். ஸ்பெக்ட்ரம் போல பல ஊழல்களைச் சொல்லாமலேயே செய்தனர்.

 கலைஞர் இந்த ‘பஞ்ச்’ டையலாகைப் பயன் படுத்துவதை விட , ‘என்றைக்கும் “வாக்கு” மாறமாட்டார் எங்கள் கலைஞர்’ என்ற பஞ்ச் டையலாகைப் பயன் படுத்தலாம். கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். :)

மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். ஒற்றுமையே பலம் என்று விளக்குவதற்காக கூட்டணி கும்பல்களிடம் இந்த பொன்மொழியை வாழும் வள்ளுவம் உபயோகிக்கலாம்.

வாழ்க கலைஞர்!, வளர்க மக்களின் மறதி!

துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!

Posted on Sunday, March 15, 2009 by நல்லதந்தி



இந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும்,  நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்!.

காமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.

அன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா? என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.

மறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல! :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா!. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.

இன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.

அத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம்.  வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.

அப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா? என்றுக் கேட்டாராம்.

இதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா?. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
திமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா! கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை! :) )

1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல)  ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.

எதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது! :) ) .........என்னத்த சொல்றதுங்க!.

(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ? :)

பி.கு.: இது எதிர் பதிவல்ல! 

இறுதிச் சங்கிலி!. உபயம் கலைஞர்.மு.க.!

Posted on Sunday, February 22, 2009 by நல்லதந்தி

இலங்கைப் பிரச்சனையில் பல்வேறு சடங்குகள் இதுவரையிலும் நடத்தப் பட்டாலும்.,அது எப்பொதுமே கலைஞர் கையால் நடத்தப்படும் சடங்காகுமா?. அவர் இந்த மாதிரி சடங்குகளை நடத்துவதில் ஈடு இணையற்ற புரோகிதர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஏற்கனவே அவர் சட்டசபையில் நடத்திய “இறுதி வேண்டுகோள்” சடங்கின் ஈரம் 
இன்னும் காயாமல் இருக்கும் போதே மீண்டும் ஒரு வழமையான சங்கிலிச் சடங்கை தமது குடும்பத்தாரால் நடத்தியுள்ளார் ...சாரி ,.....கழகத்தாரால் நடத்தியுள்ளார்.

அய்யோ! அய்யய்யோ!. இலங்கைத் தமிழர்களின் மீது அவ்வளவு அன்பா? என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஒரு வேளை அந்த அளவிற்க்கு அப்புராணி தமிழனாக இருந்தால் கவலைப் பட வேண்டாம்.அதெல்லாம் ஒன்றுமில்லை . 
தமிழினத் தலைவர் என்றப் பட்டத்தால் வருகிற வழக்கமான ஜன்னி தான் பய்ப்
பட ஒன்று மில்லை, என்று குடும்ப டாக்டர்கள் ஆறுதல் தருகிறார்கள்!.

 
இந்த படத்தில் உள்ள வருங்கால முதல்வர், மற்றொரு வருங்கால முதல்வர்,இன்னுமொரு வருங்கால முதல்வர் இவர்கள் “நான் கடவுள்” படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்க வில்லை!. 
ஏதோ சங்கிலியாம் சிவாஜி நடித்தப் படமல்ல!. மீண்டும் ..மீண்டும் சங்கிலியாம்...அதனால் இது கழகம் சம்பந்தப் பட்ட வழக்கம் போல் ஒரு இலங்ககைத் தமிழர்களுக்கான மனிதசங்கிலிதான்!.
இந்தச் சிரித்த முகங்களைப் பார்த்தால், இன்னும் இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதாய்த் தெரியவில்லை!. இதையும் மீறி அவர்கள் துன்பப் பட்டால் அதற்க்கு கழகம் பொறுப்பாக முடியுமா?. 

பி.கு: கழகத்தின் போராட்டங்கள் எப்போதுமே ஒரு வழக்கமாகச் சுற்றி வரும் வட்டம் என்பதால், இதற்க்குப் பிறகு வரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்து இருக்கக் கூடும். ஆனால் திருமா வளவன் போன்ற கழக அல்லக்கைகள் அதை நடத்தி ஒரு மாதம் மட்டுமே ஆனதால் அதை அடுத்த்ப் போராட்டமாக வைத்துக் கொள்ளக் கூடும். அதனால் அடுத்த கழகப் போராட்டம் “தமிழர் தந்தி” போராட்டமாக இருக்கக் கூடும். எனவே தமிழர்கள் இன்று சரக்கடித்தது போக மிச்சக் காசை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நாளைக் காலை மத்திய அரசுக்கு தந்தி கொடுக்க உபயோகப் படும்!.

உலகம் சுற்றும் வாலிபனும் நாகேஷும்!

Posted on Sunday, February 1, 2009 by நல்லதந்தி



தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தனக்கேன ஒரு தனி இடம் பிடித்தவர் திரு.நாகேஷ் .தமிழ் நகைச்சுவைச் சக்ரவர்த்தியாக இருந்த நாகேஷ் சில காலமாகவே உடல் நலக்கோளாறால் அவதியுற்று வந்தவர் நேற்று காலை மரணமடைந்தார். அவரது நினைவாக அவர் அளித்த பழைய பேட்டி!. 1974-ல் வந்தது!

”உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்காக அயல் நாடுகளுக்கு நாங்கள் புறப்பட்ட நேரத்தில் எங்களுக்கு அது என்ன கதை.. நமக்கென்ன பாத்திரம் என்று எதுவும் தெரியாது. எம்ஜிஆர் விளக்கமாக கதையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் ஏதும் சொல்லவில்லை.

நமெக்கேன் கவலை அவர் சொல்கிறபடி நடித்துக் கொடுப்போம் என்று எண்ணிக் கொண்டு என் குழுவினரோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தேன்,
ஜப்பான் நாட்டை அடைந்ததும் நாகேஷ் இன்னின்ன காட்சிகளை இப்படி இப்படி படமாக்கிக் கொள்ளுங்கள் என பூரண சுதந்திரம் கொடுத்தார்.காமிராமேனுடன் என் சம்பந்தப்பட்ட தனிக் காட்சிகளை இஷ்டப்படி படமாக்கினேன். முக்கியமாக நாங்கள் கருதிய இடங்களில் படமெடுத்த பிறகு அந்த விவரத்தை எம்ஜிஆரிடம் கூறிவிடுவேன்.
எம்ஜிஆர்,தன் சம்பந்தப் பட்ட காட்சிகளையும்,பாடல் காட்சிகளையும் படமாக்கினார். ஒரு பாடல் காட்சியில் தாடியுடனும், மற்றொரு படல் காட்சியில் தாடியில்லாமலும் நடித்துப் படமாக்கினார்.எனக்கு அது புரியவில்லை....என்ன சார் மாறுவேட ‘காதல் பாட்டா’ என்றேன்.அவர் சிரித்துக் கொண்டாரே தவிர விளக்கம் தரவில்லை.

மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் அப்பாடி என்று ஹோட்டலுக்கு திரும்புவோம். அறைக்குள் வந்ததும் முதல் காரியமாக அயல் நாட்டு விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டு விடுவேன். அப்புறமென்ன ஒரே குடிதான் ..தமாஷ்தான் (எம்ஜிஆருக்குத் இது தெரியாதபடி நடந்து கொள்வோம்!)
நாங்கள் இப்படி தமாஷாக் கூத்தடிப்போம், ஆனால் எம்ஜிஆர் ஹோட்டலில் தங்காமல் ஊரைச்சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவார்.. தீடீரென்று இரவு பத்து மணீக்கு  வருவார்... புறப்படுங்கள் ஒரு அருமையான லொகேஷனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்..அங்கு படமெடுக்க வேண்டும் என்று துரிதப் படுத்துவார்...

விஸ்கி வாடையை பாடுபட்டு மறைத்து விட்டு படப்பிடிப்புக்கு புறப்படுவோம். தெருக்களில் எங்களைக் கண்டபடி சுற்ற்ச் சொல்லி படம் எடுப்பார். எதற்கென்று எங்களுக்குப் புரியாது.வில்லன் தேடுகிறான் அவனிடமிருந்து தப்பிக்க ஓடு என்பார் சந்திரகலாவிடம். அவர் அப்ப்டி மறைந்து மறைந்து வீதிகளில் செல்வதை படமாக்குவார்.
என்ன கதை,இங்கு ஏன் வில்லன் வந்தான், கதாநாயகியை ஏன் துரத்துகிறான், அவளிடம் உள்ள இரகசியம் என்ன....எதுவும் எங்களுக்குத் புரியாது. ‘ஏன் சார் உங்களுக்கு இரட்டை வேடமா? என்று ஒரு நாள் கேட்டேன்....அதற்கும் சிரிப்புதான் பதில்.

பிறகு.................... 

உயிர் கொடுப்பேன்,உண்ணாவிரதம் இருப்பேன் திகில் திரை விமர்சனங்கள்

Posted on Monday, January 19, 2009 by நல்லதந்தி

சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்கள் நம் எல்லோருடைய நெஞ்சைக் கண்ணீரால் நனைய வைத்தன.இப்படியும் நடக்குமா என்று திகிலால் உறைய வைத்தன .

கலைஞர் கதை,வசனம்,திரைக்கதை எழுதி இயக்கி,நடித்த “சாகும் வரை உயிரைக் கொடுப்பேன்” திருமாவளவன் நடித்து,தயாரித்து இயக்கிய “உண்ணாமல் உண்ணாவிரதம்” ,இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,மக்களின் இரண்டு நாள் கவலையை திசைதிருப்பின என்றால் அதில் குற்றம் இல்லை.ஒரு கவலைக்கு பதில் இரண்டு கவலையாக மக்கள் படும்படிச் செய்து அதில் இருவரும் வெற்றி கண்டனர்.இரண்டிலும் வெளிக்கதையில் இலங்கைப் பிரச்சனையையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் உள்ளே வழக்கம் போல சொந்தக் கதைகளே பிரதானமாக இருந்தது.அதை இருவரும் வெளிக்காட்டாமல் தங்களை இலங்கைத்தியாகிகளாக சித்தரித்துக் காட்டியது இருவரின் டைரக்‌ஷன் திறமைக்கு நல்ல உதாரணம்.

கலைஞரின் “சாகும் வரை உயிர் கொடுப்பேன்” வழக்கமான கதைதான் என்றாலும் கலைஞர் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் கம்பனி தயாரிப்பாதலால் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல் படத்தின் திரைக்கதை காமெடியாக அமைக்கப் பட்டிருந்தது,ஜனங்களை எடை போடும் கலைஞரின் திறமையைக் காட்டியது.

மேடை ஏறும் போதெல்லாம் உயிரைக் கொடுப்பேன் என்கிற வசனத்தைக் கலைஞர் பேசுகிறார்.ஜனங்கள் சிறிது தொய்வடையும் போது,வசனகர்த்தா கலைஞர் வசனத்தை மாற்றிப்போட்டு கடலில் கட்டு மரமாவேன் என்று சொல்லும் போதிலும்,சில இடங்களில் விலா எலும்பை முறித்தாலும் ”ஒகேனக்கல்” ஆவேன் என்று பஞ்ச் டையலாக் அடிக்கும் போதும் நடிகர் கலைஞர் ஜொலிப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.சும்மாவா எத்தனை வருட நடிப்பு அனுபவம்.

வசனமா நடிப்பா எதைப் பாராட்டுவது என்று திகைக்க வைத்து விடுகிறார் மனிதர். அதிலும் ”இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் கொடுப்பேன்” என்கின்ற வசனத்தை வழக்கம் போல் சொல்லாமல் ”கொடுப்பேன் உயிர் தமிழர்களுக்காக இலங்கை” என்று ஜூனூன் தமிழில் வசனம் பேசிவிட்டு எல்லாம் அன்னை சோனியாவின் ஆசியால் வருவது என நமுட்டு சிரிப்பு சிரிப்பது திரை அரங்கை அதிர வைக்கிறது.

ப்ரணாப் முகர்ஜியுடன் “போவீயா! போமாட்டாயா! போலேன்னா உன் பேச்சுக்கா!” என்ற பாடலில் கலைஞரும்,ப்ரணாப் முகர்ஜியும் டப்பாங்குத்து டான்ஸ் ஆடிஅசத்துகின்றனர்.நடன இயக்கத்தை மன்மோகன் சிங் கையாண்டு இருக்கிறார்.சில இடங்களில் நம்புகிறார்ப்போல அமைத்திருக்கிறார்.சில இடங்களில் சற்று சோடையாகும் போது கலைஞர் தன் அனுபவத்தால் அதைச் சமாளிக்கிறார்.

”இலங்கைத் தமிழன் சாகிறான்.அவனைக் காப்பாற்ற வழியில்லை வா!தமிழனே அனைவரும் சேர்த்து சாவோம்” என்று சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே கவலைப் படும் காட்சி ஏற்கனவே கலைஞர் புரெடெக்‌ஷாரின் ”இலங்கைத் தமிழருக்கு இன்னுயிரைத் தருவோம் Part 3 யில் கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்காக பிறந்தநாளைக் கொண்டாட மாட்டேன் என பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தின் போது சொன்னதை நினைவு படுத்துகிறது.டைரக்டர் கவனிக்கவில்லையா?.அதே போல் அந்தக் காட்சியில் அவர் அனைவரும் சாவோம் என்று கூறிக் கொண்டு அழுதவாறு வானத்தைப் பார்க்கும் போது ஆயுதமேற்றிக் கொண்டு இலங்கை செல்லும் இந்திய விமானம் கண்ணில் படுகிறது.இது டைரக்டரின் உத்தியா?அல்லது தெரியாமல் நடந்த தவறா? என்று தெரியவில்லை.கலைஞருக்குத்தான் வெளிச்சம்.

க்ளைமாக்ஸ் காட்சி திருமங்கலம் இடைத்தேர்தலில் அமைக்கப்பட்டு இருப்பது ஏனென்று புரியவில்லை.இப்போது கலைஞர் இயக்கத்தில் தயாராகிவரும் “பாரப்பா! பார்லிமெண்டப்பா!” என்கிற படத்தின் முதல் காட்சியாக இருக்குமோ என்னவோ?.ஆனாலும் கலைஞரின் இயக்கத்தில் ஒரு காட்சிகூட வீணாகாது என்று நிரூபிக்கும் வகையில் கடைசி காட்சி சூப்பர்!.

அழகிரிக்கு “ நீ தென்மண்டல திமுக செயல் அமைப்பாளராக இரு!” என்று கலைஞர் சாபம் விடும் காட்சி அற்புதம்.அதைக் கேட்டு எத்தனை பாரத்தை நான் தாங்குவேன் என்று அழுது பிறகு அதை வீரமுடன் ஏற்கும் காட்சியில் அழகிரி சோபிக்கிறார்.
இந்த மாதிரிக் காட்சிகள் கலைஞரின் இயக்கத்தில் வழக்கமாக பார்க்கும் ஒன்று என்றாலும் ஒவ்வொரு முறையும் நம்புமளவிற்கு இருப்பது கலைஞரின் திரைக்கதை அமைக்கும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!.

திருமாவளவனின் ”லோ” பட்ஜெட் படமான “உண்ணாமல் உண்ணாவிரதம்” இரண்டு நாள் கூட ஓடாதது,முதலில் திருமாவளவனுக்குத்தான் மகிழ்சி அளித்திருக்கும்.

கதை என்னவோ வழக்கமான பங்காளிச் சண்டைக்கதைதான் அதை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏற்றிக் காட்டும் விதத்தில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.இதற்கு முன்னரே தமிழக நடிக இயக்குனர்களின் பாரம்பரியப் படி இலங்கைப் பிரச்சனைக் கதையில் இவரும் பலமுறை நடித்திருக்கிறார் என்றாலும் இந்த தடவை இவரது நடிப்பு எடுபடவில்லை.

தம்பி செல்வப் பெருந்தகை வீட்டிலுள்ள நகை நட்டுக்களை அபேஸ் செய்து விட்டு மாயாவதி பஸ்ஸில் ஏறிக்கொண்டு திருமாவளவனுக்கு டாட்டா காட்டி சிரிக்கும் காட்சியில் இருவருமே தங்களுடைய அதி அற்புத நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர்.திருமாவளவன் அழ,செல்வப் பெருந்தகைச் சிரிக்க,கேமரா சுழன்று இருவரையும் சுத்தி வருவது டைரக்டரின் திறமை வெளிப்படுத்துகிறது.

செல்வப் பெருந்தகை மாயாவதி பஸ் கம்பனியில் கிளீனர் வேலையில் சேருமாறு திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுக்கும் காட்சி செமை நக்கல்.பதிலுக்கு திருமாவளவன் பஸ்ஸைப் பஞ்சர் ஆக்குவேன் என்று ஆவேசமாக முள்ளை எடுத்துக் காண்பிக்கும் போது தியேட்டரே திகிலால் உறைகிறது.

ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கலைஞரிடம்,செல்வப் பெருந்தகை ஸ்கூலுக்கு வரமாட்டான் அவனுக்கு டி.ஸி கொடுத்து விடுங்கள் என திருமாவள்வன் கேட்கும் போது “வெயிட் அண்ட் ஸீ” என கலைஞர் புன்னகைக்கும் மர்மம் நமக்குப் புரிவதால் அவருடைய சிரிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

தயாரிப்பாளர் திருமாவளவனுக்கு தன்னுடைய தயாரிப்பு கடலூர் ஏரியாவைத் தவிர வேறங்கும் ஓடாமல் இருப்பது பெருங்கவலையாக இருக்கும் போலிருக்கிறது.அதனால் தெற்குப் பக்கமும் ஓடுவதற்காக சில சண்டைக் காட்சிகளை மதுரையில் எடுத்து இருக்கிறார்.ப்ஸ் எரிக்கிறவரைக்கும் பல்லுக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்த்து விட்டு “ஆச்சா! சரி ஓடுங்கப்பா” என்று எரித்தவர்களைக் கேட்டுக் கொண்டு “பஸ் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுப் பிடிப்பேன்” என்று வானத்தை நோக்கி சுடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.போலீஸ் கலைஞர்களைக் காமெடியனாக மட்டும் காட்டுவது கலைஞரின் பாணி என்றாலும்,கலைஞரிடம் சிஷ்யனாக இருந்தவர் என்று நிருபிக்கிறார் இயக்குனர் திருமாவளவன்.

க்ளைமாக்ஸ்தான் சப்பென்று போய்விட்டது.இலங்கை பிரச்சனை கட்டுரையை பேச்சுப் போட்டிக்காக படித்துக் கொண்டு வந்த திருமாவளவனை பேசக் கூடாது நீ பேசினால் அந்தச் சத்தத்தில் கூரை இடிந்து விடும், எனக்கு ஆபத்து என்கிறார் கலைஞர்.பேச முடியாததால் தொண்டைக் கட்டிப் போன திருமாவளவன் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.தம்பி ஓடிப்போக,ஸ்கூல் எல்லாம் கிண்டல் செய்யகிறது வேறு வழியில்லாமல் உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார்.மாணவர்கள் கிண்டலை நிறுத்தியவுடன் உண்ணாவிரதம் க்ளோஸ்.பத்து நாளைக்காவது ஓடும் என்று கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு படம் பார்க்க வந்தவர்கள் கதி பரிதாபம்.மம்தா பானர்ஜி நடித்த உண்ணாவிரதப் படம் போல 30 நாளைக்கு மேல் ஓடும் என எதிர்பார்த்தால் நீங்கள் இந்த ஊரில் இருப்பதற்கு இலயக்கில்லை என்று அர்த்தம்.

திரை முன்னோட்டம்

இராமதாஸ் அளிக்கும் “பத்துக்கு பத்து” குடும்பச்சித்திரத்தின் ஒரு காட்சி மறைமலை நகரில் படமாக்கப்பட்டது.கலைஞர்,இராமதாஸ் நடிக்கும் இப்படத்தில் காமெடிக்குப் பஞ்சமில்லை.மத்திய அரசின் ”பத்துக்குப் பத்து” வீட்டை சோனியா பெரியம்மா,மன்மோகன் சிங் மாமாவுடன் சேர்ந்து பங்காளிகளான கலைஞரும்,இராமதாஸும் கட்டுகிறார்கள்.இந்த வீட்டினால் அந்தத் தெருவே நாறுகிறது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கொண்டு போயிருக்கிறாராம் டைரக்டர்.

தெருவில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வசிப்பவர்களை, இலங்கையில் குப்பை போட்டதற்கு திட்டும் போது தங்களுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லாததைப் போல கலைஞரும்,இராமதாஸும் நிற்க்கும் காட்சி சூப்பர்.சில சமயங்களில் நல்லாயிருப்பார்களா இந்த வீட்டுக்காரர்கள்,நாசமாகப் போகட்டும்,கட்டையில போகட்டும் இந்த வீட்டில் உள்ள தங்களையே தாங்களே திட்டிக் கொள்ளும் ஸ்பிலிட்டிங் மல்டி பர்சனாலிட்டிக் காட்சிகளில் முதலிடம் தருவது கலைஞருக்கா இராமதாஸுக்கா என்று தமக்கு நிலைதடுமாறுகிறது,என்கிறார் நமது திரை நிருபர்.ஹாட்ஸ் ஹாஃப்.

தீபாவளிக்கு இரயில் பட்டாசு விடும் போதும்,மணலில் மல்டி ஸ்பெஸாலிட்டி ஆஸ்பத்திரி கட்டும் சீன்களிலும் வேடிக்கைப் பார்க்க தெருவே கூடும் போது, தான் வீட்டைச் சேர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள இராமதாஸ் முண்டியடித்துக் கொண்டு தலையைக் காட்டும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றனவாம்.தமிழன் என்றால் இந்த மத்திய அரசு வீட்டுக்காரர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது என்ற வசனத்தை இராமதாஸ்,கண்ணாடியின் முன் நின்று தனக்குத்தானே ஆவேசமாகப் பேசும் காட்சி நேற்று படமாக்கும் போது படப்பிடிப்புக் குழுவினரே துக்கம் தாங்காமல் அழுதார்களாம்.

மொத்தத்தில் வீட்டில் இருக்கும் இராமதாஸ் வெளியேறும் காட்சி இன்னும் படமாக்க வில்லை என்பதால் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மூன்று மாதம் ஆகலாம்.