ஸ்ரீதர் தமிழர்களின் வாழ்க்கையில்மறக்கமுடியாத ஒரு பெயர்!.இந்த கவர்ச்சிகரமான பெயர் அந்தக் கால எத்தனை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வெறித்தனமான வேகத்தைத் தந்தது!.சொல்லப் போனால் மிகுந்த மோகத்தையும் தந்தது!.
1933-ல் பிறந்த இவர் 1954 முதல் 1991 வரை உள்ள 35 ஆண்டுக் காலம் திரையுலகில் இருந்தார்.இவர் கோலச்சிய காலம் சுமார் 35 ஆண்டுகள்.இப்படி 35 ஆண்டு காலம் கோலோச்சிய இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் வெகு குறைவு. தன் திரையுல வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைக் கண்டாலும்,தமிழ்த் திரையுலகை பல பரிமாணங்களுக்கு இட்டுச் சென்றவர்!.
திரு.இளங்கோவன் என்றால் யாருக்கும் தெரியாது,இரத்தக் கண்ணீர் வசனகர்த்தா என்றால் எல்லாருக்கும் பளீச் சென்று தெரியும்.ஸ்ரீதருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்.இவருடைய தாக்கத்தாலேயே ஸ்ரீதர் திரையுலகில் நுழைந்தார். ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,இளங்கோவனுடைய வசனங்கள் தீவிர தமிழ் வீச்சு உடையவை,அது போன்ற வசனங்களை ஸ்ரீதர் என்றுமே தன் பாணியாகக் கொண்டதில்லை.
இளங்ககோவனின் வசனங்களின் பாணியைப் பின் பற்றி அண்ணாவும், அவரது சீடரான கருணாநிதியும் பெரு வளர்ச்சி கண்டிருந்த நேரத்தில், அதற்க்கு நேர் மாறாக இயல்பான வசனங்களை எழுதி அதனால் தன்னை தமிழகமே திரும்பிப் பார்க்கும் படி செய்தவர் ஸ்ரீதர்!.
இரத்தபாசம் என்ற திரைப் படத்தின் மூலமாக 1954-ல் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் நுழைந்த போது அவருக்கு வயது வெறும் இருபத்தி ஒன்றுதான்!.அந்த நேரத்தில் எம்ஜிஆரின் ம்லைக்கள்ளனும்,சிவாஜியின் மனோகராவும் வெளி வந்தன.இந்த இரண்டு படங்களுக்கு இடையேயும் T.K.சண்முகம் நடித்த இரத்த பாசம் பெரு வெற்றி பெற்றது.பிறகு அடுத்து வந்த வருடங்களில் எதிர் பாராதது,அமரதீபம் ,மகேஸ்வரி,எங்க வீட்டு மகாலட்சுமி,மஞ்சள் மகிமை,உத்தமபுத்திரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.
இதில் எல்லாப் படங்கள் பெரு வெற்றி பெற்றன.ஸ்ரீதர் புகழ் பெற்ற வசனகர்த்தாக் களின் வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தார்.இதற்க்கடுத்து கல்யாணப் பரிசு படத்தை இயக்கியதும்,அதை இயக்கும் போது முதலில் ஏற்ப்பட்ட பிரச்சனை களும் அனைவரும் அறிந்ததே,அதனால் அதைப் பற்றி விஸ்தாரமாகப் பேச ஓன்றும் இல்லை!.
ஸ்ரீதருடை சினிமா கிராஃப் பல முறை மேலேறி கீழறங்கும் வித்தை கொண்டது. இவர் கல்யாணப் பரிசு போன்ற படங்களை கொடுத்த காலத்தில் சிவாஜி சொந்தப் படமான விடிவெள்ளி ஊற்றிக் கொண்டது,தேன்நிலவு போன்ற படங்கள் அப்போது தேல்வியைத் தழுவினாலும் இன்றும் பார்க்கும் போது ஆர்ச்சரியப் படவைக்கும் தன்மை கொண்டது.
அடுத்து சிலிர்த்தெழுந்த ஸ்ரீதர் சுமைதாங்கி போன்ற படங்களில் எழுந்தார்.பிறகு கொடிமலர் போன்ற படங்கள் அவரது சுமையை ஏற்றின.ஆனால் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற படங்கள் ,அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தன. வெற்றியும் கண்டன.நெஞ்சம் மறப்பதில்லை ஒரு சராசரிப்படமாக இருந்தாலும் இன்றும் மக்களின் மனதில் நின்றபடம்!.
அடுத்த ஆட்டத்தை கலரில் ஆரம்பித்தார் காதலிக்க நேரமில்லை!.இதுவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டிராத காண்முடியாத அரும் பெரும் நகைச்சுவைப் படத்தை மக்களுக்கு அளித்தார்.அதுவரையில் பம்பாய் சென்றே கலர்ப் படங்களை பிரதியெடுத்தார்கள்.ஜெமினி நிறுவனம் தன்னுடைய கலர் லேப்பை ஆரம்பித்தவுடன் அதில் பிரதி எடுக்கப் பட்ட முதல் படம் இதுதான்!.
பிறகு ஊட்டிவரை உறவு,போன்ற படங்களையும் அவர் தந்தார்.வெண்ணிற ஆடையில் அவருக்கு அடி விழுந்தாலும் அதில் நடித்த கலைஞர்கள் மிகவும் புகழ் பெற்றனர்.
அடுத்த கட்டமும் அவருக்கு மிகவும் சோர்வைத் தந்தது , நெஞ்சிருக்கும் வரை,போன்ற படங்கள் வரிசையாக அடி வாங்கின!.அவளுக்கென்று ஒரு மனம்,சிவந்த மண் போன்ற படங்கள் வண்ணத்தில் எடுக்கப் பட்டாலும் பெரு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.இன்னமும் அவளுக்கென்று ஒரு மனம் படப் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றவையாகவே இருக்கின்றன.
70 களில் சிவாஜியை வைத்து வைரநெஞ்சம் என்றப் படத்தை உருவாக்கினார்.இது இவரது வாழ்க்கையிலேயே சிரமான கட்டம்தான் என்று சொல்ல வேண்டும்.இந்தப் படம் மகாத் தோல்வியைத் தழுவியது.மிகவும் சிரமத்திற்குள்ளான ஸ்ரீதர் அன்றைய சூப்ப்ர்ஸ்டார் திரு.எம்.ஜிஆரிடம் உதவியை நாடினார்.இவர் படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருமுறை கூட எம்ஜிஆரை வைத்து எடுத்ததில்லை.(ஒரு முறை அன்று சிந்திய ரத்தம் என்றப் படத்தை எம்ஜிஆரை வைத்து எடுக்க முயற்ச்சி செய்தார்..கைகூடி வரவில்லை) அதற்க்குக் காரணம் பல இருந்தன.ஸ்ரீதரைப் பொறுத்தவரை குறைந்த சம்பளம் உள்ள நடிகர்கள்,நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள் ,நல்ல படம் ,நல்ல லாபம் என்ற அடிப்படைக் கொள்கையிலேயே இயங்கி வந்தார்.
இதனால் இவரது படங்கள் இயக்குனர் படம் என்றும் புகழ் பெற்றன.தம் தகுதியை அவர் அப்போது விட்டுக் கொடுக்காமலேயே இயங்கினார்.சிவாஜியை வைத்து இயக்கினாலும் அவர் இயக்குனர்களின் நடிகர் என்பதை மறக்கக் கூடாது.
தம்முடைய தொடர் தோல்வியினால் மனம் நொந்த நிலையில் எம்ஜிஆரை அணுகியதும் எம்ஜிஆர் தன்னுடைய பெருந்தன்மையை நிரூபித்தார்.அடுத்தது ஆரம்பமானது ஸ்ரீதருடைய அடுத்த பரிமாணம் .உரிமைக்குரல் முழுக்க முழுக்க எம்ஜிஆர் படமாக வெளிவந்தாலும் “விழியே கதையெழுது” என்ற பாடல் ஸ்ரீதருடைய “டச்”சிலேயே இருந்தது என்பது ஸ்ரீதர் ஆளுமைக்கு காரணமா?எம்ஜிஆருடைய பெருந்தன்மையா?.அல்லது வியாபார நோக்கில் இருவருடைய “காம்ரமைஸா” என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
படம் சூப்பர் டூப்ப்ர் வெற்றி!.தமிழகத்தில் அன்றுள்ள திரையுலக மந்தமான சூழ்நிலையில் பல விநியோகஸ்தர்களும்,திரைஅரங்கு உரிமையாளகளும் பிழைத்தனர்(அந்த சூழ்நிலைக்குக் காரணம் அரசியல் காரணமாக எம்ஜிஆரின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட கலைஞர்தான் என்பது வேறு விஷயம்....இதைப் பற்றிப் பேசப் போய் கட்டுரை வேறு பக்கம் போய் விடப் போகிறது..எனவே இதை இத்தோடு ஏறக்கட்டிவிடலாம்!)
பிறகு, எம்ஜிஆரை முதலமைச்சராக்க வந்தது மீனவ நண்பன்.இதுவும் சூப்ப்ர் டூப்பர் ஹிட்!.இந்த கால கட்டத்திலேயே ஸ்ரீதர் இயக்கத்தில் பூஜை போட்டு சில காட்சிகளும்,பாடல்களும் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற படம் எடுக்கப் பட்டது .எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் அது கைவிடப் பட்டது.இந்தப் படத்திலும் சில காட்சிகளை நாம் கண்டிருப்போம். எனென்றால் இது தான் பிற்பாடு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளி வ்ந்த “அவரச போலீஸ்”என்ற படத்தில் எம்ஜிஆர் வரும் காட்சிகளுக்காக உபயோகப்ப்டுத்தப் பட்டது !.
இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீதரின் அலைகள்,ஓ..மஞ்சு போன்ற படங்கள் வெளிவந்து தோல்வியைத் தழுவின.
அடுத்து எம்ஜிஆர் அரசியலுக்குச் சென்ற பிறகு தனது அடுத்த பரிமாணத்திற்கு செல்ல அன்றைய இளம் நடிகர்களான ரஜினியையும் கமலையும் வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தைக் கொடுத்தார்.அவரது வழக்கமான முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் தன் பழைய பாணியில் இருந்து மாறி 78 வருடத்திற்க்கேற்ப இளமையாகத் தந்தார்.படம் மெகா ஹிட் ஆனது.அடுத்து மீண்டும் விஜயகுமார்,ஜெய்கணேஷ் போன்றவர்களை வைத்து மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக அழகே உன்னை ஆராதிக்கிறேன் வெளி வந்தது.இதுவும் மெகா ஹிட் ஆனது.இரண்டு படங்களிலும் இளையராஜா ஒரு ராக ரகளையே செய்து அசத்தியிருந்தார்.
மீண்டும் ஸ்ரீதருக்கு இறங்கு முகம்.இந்தக் காலக் கட்டத்தில் ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்கள் வெளிவந்தன.ஆனால் எந்த படங்களும் வெற்றியைத் தொடவில்லை.
1985 வாக்கில் மைக் மோகனை வைத்து தென்றலே என்னைத் தொடு என்ற காமெடி கலந்த காதல் கதையை இயக்கினார்.இதில் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோவோ என்ற அளவிற்கு கலக்கியிருந்தார்.படம் சூப்பர் ஹிட்!.இதற்கு பிறகு திரைக்கு வந்த ஆலயதீபத்துடன் ஸ்ரீதருடைய திரையுல வெற்றிகள் முடிந்து போயின.
ரஜினியுடம் துடிக்கும் கரங்கள்(இதில்தான் தமிழில் S.P.பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்).கமலுடன் நானும் ஒரு தொழிலாளி போன்ற படங்கள் ஸ்ரீதருக்கும் ரஜினி,கமலுக்கும் பெருமை சேர்க்கவில்லை.ஆர்ஜூன்,சதனா போன்ற அந்த காலத்தில் கடைநிலை ஹீரோ ஹீரோயின் களோடு இணைந்து ”குளிர் மேகங்கள்” போன்ற யாராலும் அறியப் படாத படங்களையும் எடுத்து தன்னயும்,மற்றவர்களையும் சிரமப்படுத்தினார்.என்னுடய படங்கள் ஏன் தோல்வியைத் தழுவுகின்றன என்றே தெரியவில்லை எனப் பத்திரிக்கைகளில் புலம்பும் அளவிற்க்கு தள்ளப் பட்டார்.திரையுலகை ஸ்டெடி செய்து மீண்டும் வெற்றி பெருவேன் என்றார்.
நீண்ட இடை வேளைக்குப் பின் 91-ல் விக்ரம்,ரோகிணியை வைத்து “தந்து விட்டேன் என்னை”என்ற படத்தைக் கொடுத்தார்.இதில்தான் விக்ரம் அறிமுகமானர்.இந்தப் படமும் பப்படம் ஆகவே, தன் நீண்ட திரையுலக வாழ்க்கையைத் துறந்து ஒரு தோல் பதனிடும் தொழிற்ச்சாலையை வெற்றிகரமாக நடத்தினார்.திரையுலகில் இருந்தவர் அதிலிருந்து வெளிவந்து வெற்றிகரமான தொழில் அதிபர் ஆனதிலும் நம் ஸ்ரீதர் புதுமை படைத்தார்.
பாரதிராஜாவுக்கு முன்பே டைரக்டர்களின் டைரக்டர் என்று பெருமை பெற்றவர் ஸ்ரீதர்.இவரால் பட்டறையில் இருந்து வெளிவந்த பல இயக்குனர்கள் பெரும் புகழ் பெற்றனர்.
P.மாதவன் போன்றோர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றனர்.பீம்சிங்கிற்குப் பின் சிவாஜியின் ஆஸ்தான டைரக்டர் ஆனார்,P.மாதவன்.
C.V.ராஜேந்திரனும் மிகப் பெரிய வெற்றியடைந்தார்.(இவர் ஸ்ரீதரின் (உறவினர்) தம்பி!)இவரும் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கினார்.ஸ்டாலினை வைத்து குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்,என்பது கழகத் தோழர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்.
சக்ரவர்த்தி இவரும் பல படங்களை இயக்கினார்.உத்தரவின்றி உள்ளே வா, திக்குத் தெரியாத காட்டில் போன்றவை,குறிப்பிடத்தக்கவை(இவர் செல்வி ஜெயலலிதாவின் உறவினர் என்பது கூடுதல் தகவல்)
தற்காலத்தில் புகழ் பெற்ற டைரக்டர்களாக விளங்கும் P.வாசு,சந்தான பாரதி போன்றவர்களும் ஸ்ரீதரின் தாயாரிப்புகளே.
ஸ்ரீதர் அறிமுகம் செய்த நடிக,நடிகையரில் பட்டியல் மிக நீளமானது.தேன் நிலவில் புது நடிகையை அறிமுகம் செய்தார்.பெயர் தெரியவில்லை. பட்டதாரியான அந்தப் பெண் அதிகப் படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. 71-ல் திமுகாவில் இருந்த காமராஜரைத் தோற்கடித்த சீனிவாசனை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.என்று நினைக்கிறேன்.அதன் பின் படத்தயாரிப்பாளராக மாறினார்.
சுமைதாங்கியில் விஜயலட்சுமி,காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்,காஞ்சனா,ராஜஸ்ரீ.நாகேஷும் இவர் படங்களில் நடித்துத்தான் ஆரம்பகாலத்தில் புகழ் பெற்றார்.வெண்ணிற ஆடையில்,ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி,வெண்ணிற ஆடை நிர்மலா,ஆஷா(பிற்பாடு சைலஸ்ரீ என்று பெயர் மாற்றிக் கொண்டார்).நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மாலி,அலைகள் படத்தின் மூலமாக தமிழுக்கு இன்று கன்னடத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஷ்ணுவர்தன், ஓ...மஞ்சு படத்தில் கவிதா...இன்னும் எத்தனையோ பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்.
வசனத்தில் மாற்றம் கொண்டு வந்தது(அடேய் பழி! போன்ற அந்தக் கால கல்லூரி மாணவர்களின் சொல்லாடலைப் பயன் படுத்தினார்,இந்த வார்த்தை சக மாணவனை மச்சி,மாம்ஸ் என்று அழைப்பது போன்றது),தமிழ் சினிமாவை ஸ்டூடியோவில் இருந்து வெளி உலகத்திற்க்கு கொண்டு வந்தது.வசன சினிமாவை காட்சி சினிமாவாக மாற்றியது,அழகிய வண்ணப் படங்களுக்கு தமிழ் சினிமா மாறக் காரணமாக இருந்தது,தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்களை வட நாட்டு சினிமா உலகம் ஆச்சரியமாகப் பார்க்கும் படி செய்தது, இன்னும் இது போன்ற எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் ஸ்ரீதர். வாழ்க வளர்க ஸ்ரீதரின் புகழ்!
வால் பையன் சினிமா தொடர்பான தொடருக்கு என்னை அழைத்திருந்தார்.இந்த மாதிரி செயின் விளையாட்டெல்லாம் பிரபல பதிவர்கள் செய்வது என்று ப்ளீச்சிங் பௌடர் எழுதியிந்ததாலும்,நான் பிரபல பதிவர் இல்லை என்பதாலும்,அதை விட முக்கியமான விஷயம் அடுத்தது நான் யாரை அழைப்பது என்பது எனக்குத் தெரியாததாலும்,இணையத்தில் எனக்குத் தெரிந்த ப்ளீச்சிங் பௌடரை கூப்பிட முடியாததாலும் (அவர்தானே இந்த செயின் விளையாட்டை கிண்டல் செய்த்து) இன்ன பிற காரணங் களாலும், வால் பையன் அழைத்த செயின் விளையாட்டு விளையாட முடியவில்லை.
எனவே வால்பையன் கூப்பிட்ட மரியாதைக்காக இந்தக் கட்டுரை.
நன்றாக இருந்தால் வால் பையனைப் பாராட்டவும்,நன்றாக இல்லையென்றால் அவரையே திட்டவும்!. :))