பெங்களூரு குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாளான நேற்று, குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில், தொடர்ச்சியாக 16 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 20 பேர் பலியாயினர்; 100 பேர் படுகாயமடைந்தனர். ஒவ்வொரு மாநிலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்வதைக் கண்டு, "இவர்களின் அடுத்த இலக்கு எங்கே?' என்ற பீதி, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே எழுந்துள்ளது. "அமைதியாக இருக்கும்படி' பிரதமர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் மதியம் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், இரண்டு பேர் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.
முதல்வர் மோடியின் தொகுதி: இத்தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதல் நடந்த மறுநாளே மக்களிடையே பீதி மறையாத நிலையில், குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நேற்று தொடர்ச்சியாக 16 இடங்களில் குண்டுகள் வெடித்தன.ஆமதாபாத்திலுள்ள முதல்வர் மோடியின் தொகுதியான மணி நகர், இசான்பூர், நரோல் சர்க்கிள், பாபு நகர், ஹட்கேஷ்வர், சர்கேஜ், சாரங்பூர் பிரிட்ஜ், சக்லா பகுதி, கோவிந்த்வாடி, கிஷன்பூர், நரோதா பிட்டியா மற்றும் அம்ரைவாடி உட்பட 16 இடங்களில், நேற்று மாலை 6.45 மணியளவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சர்கேஜ் பகுதியில் ஒரு பஸ்சில் குண்டு வெடித்தது. வெடிகுண்டுகள் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகள் பெரும்பாலானவை மார்க்கெட் பகுதிகள். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.ஒவ்வொரு மாநிலமாக பயங்கரவாதிகள் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவது கண்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.வெடிகுண்டு தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் சகீல் அகமது கூறுகையில், "பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மாநில தலைநகரங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியது. இதில் ஆமதாபாத் நகரும் அடங்கும்' என்றார். அனைத்து மக்களும் அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜராத்தில் அனைத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவைத் தொடர்ந்து பா.ஜ., ஆளும் குஜராத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. தனி குண்டுவெடிப்புகளை விட தற்போது தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டை அதிகமாக உலுக்கி வருகின்றன.2005 - டில்லி மார்க்கெட் குண்டு வெடிப்புகள்அக்டோபர் 29ம் தேதி டில்லியில் வெடித்த மூன்று குண்டுகளால் டில்லி அதிர்ந்தது. இந்த சம்பவத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்; 210 பேர் படுகாயமடைந்தனர். இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு இரு நாட்கள் முன், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளான மத்திய மற்றும் தெற்கு டில்லி மார்க்கெட்டுகளில் இரு குண்டுகளும் கோவிந்தபுரியில் பஸ்சில் ஒரு குண்டும் வெடித்தன.இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்புகளான இஸ்லாமிக் புரட்சிகர முன்னணி மற்றும் இஸ்லாமிக் இன்குலாப் மகஸ் ஆகிய அமைப்புகளுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2006 - வாரணாசி குண்டு வெடிப்புகள்
இந்துக்களின் புனித நகரமான உ.பி.,யில் உள்ள வாரணாசியில் மார்ச் 7ம் தேதி மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர்; 101 பேர் காயமடைந்தனர்.சங்கத் மோச்சன் அனுமன் கோவில், வாரணாசி கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன், டில்லி செல்லவிருந்த சிவகங்கா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்புக்கு காஷ்மீர் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வாரணாசியில் வெடித்த குண்டுகள் அனைத்தும் பீகாரில் தயார் செய்யப்பட்டவை என்று போலீசார் தெரிவித்தனர்.
2006 - மும்பை ரயில் குண்டு வெடிப்புகள்: மும்பையில் ஜூலை 11ம் தேதி தொடர்ச்சியாக வெடித்த ஏழு குண்டு வெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் காயமடைந்தனர்.சாந்தகுரூஸ், பந்த்ரா, ஜோகேஸ்வரி, மாஹிம், மீரா ரோடு, மாதுங்கா, பொரிவிலி ஆகிய ஏழு இடங்களில் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. மும்பை மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் நம்பியிருக்கும் ரயில்களில் வெடித்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சிமி இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2006 - மாலேகான் தொடர் குண்டு வெடிப்புகள்: மகாராஷ்டிராவில் நாசிக் அருகே மாலேகானில் செப்டம்பர் 8ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், 37 பேர் கொல்லப்பட்டனர்; 125 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் இஸ்லாமியர்களே. குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தன. மசூதி அருகே குண்டுகள் வெடித்ததால் அங்கு தப்பியோடுவதற்காக மக்களிடையே நெரிசல் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புக்கு சிமி அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2007 - ஐதராபாத் பொழுதுபோக்கு பூங்கா குண்டுவெடிப்பு: ஐதராபாத்தில் பொழுதுபோக்குப் பூங்கா மற்றும் சாலையோர உணவுக்கடையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 42 பேர் பலியானார்கள்; 54 பேர் காயமடைந்தனர். மூன்றாவது குண்டுவெடிப்புச் சம்பவம் நடக்கும் முன் போலீசார் நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி அழித்தனர். சம்பவம் நடந்த மறுநாளும் 19 குண்டுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.இச்சம்பவத்துக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி எனும் அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2008 - ஜெய்ப்பூர் சைக்கிள் குண்டுகள்: ஜெய்ப்பூரில் மே மாதம் 13ம் தேதி 15 நிமிடங்களுக்குள் ஒன்பது குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 63 பேர் கொல்லப்பட்டனர்; 210 பேர் காயமடைந்தனர். சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இ-மெயில் வழியாக தகவல் அனுப்பி பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு இருப்பது இந்த சம்பவத்தில் தான் வெளியுலகுக்குத் தெரிந்தது. ராஜஸ்தானில் உள்ள வங்கதேசத்தவர்களை நாடு திருப்பி அனுப்பும் திட்டத்தால் வங்கதேச தீவிரவாத அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் சந்தேகிக்கிறது.
2008 - பெங்களூரு குண்டுவெடிப்புகள்: நேற்று முன்தினம் நடந்த குறைந்த சக்தி கொண்ட தொடர் குண்டுவெடிப்புகளில் பெரிய அளவில் உயிர்ச் சேதம் இல்லை. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 15 பேர் காயமடைந்தனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சிமி அமைப்புகள் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நன்றி: தினமலர்